Last Updated : 28 May, 2024 10:45 AM

28  

Published : 28 May 2024 10:45 AM
Last Updated : 28 May 2024 10:45 AM

“பிரதமர் மோடிக்கு ராகுல் ஒருபோதும் ஈடாக முடியாது” - ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி பேட்டி

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி ஒருபோதும் ஈடாக முடியாது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ 'ஆர்கனைஸர்' ஆங்கில வார இதழின் முன்னாள் ஆசிரியரான இவர், புனே பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராகவும் உள்ளார்.

மும்பை பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாகவும் உள்ள இவர் மக்களவைத் தேர்தலில் பாஜக மீதான புகார்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’ கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:

நானூறுக்கும் அதிகமான தொகுதிகளை பெறுவோம் என நம்பிக்கை வைத்த பாஜகவுக்கு மெஜாரிட்டியே கிடைக்காது என்ற பேச்சு கிளம்புகிறதே? - பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 400-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்க நிச்சயம் வாய்ப்புள்ளது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகச் சிறப்பாகக் களப்பணியாற்றி வருகின்றன. எனவே அவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடைவார்கள். வீண் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் தனது சாதனைகளை முன் வைக்காமல், இந்து, முஸ்லிம், பாகிஸ்தான் என பேசுவது சரியா? - பாஜக அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது சாதனைகளை வெளியிட்டு வருகிறது. மக்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். பாஜக தனது பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கி, அதனை தொடர்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்போது, பாஜக அதற்கு தக்க பதிலடி கொடுப்பது அவசியமாகிறது. எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டி உள்ளது. ஓட்டுக்காக, எதிர்க்கட்சியினர் சிறுபான்மையினரை தாஜா செய்தால், உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டியது பிரதமரின் கடமை.

பாஜக தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்தால், மோடி மீண்டும் பிரதமராக முடியாது என தகவல் பரவுகிறதே? - மீண்டும் ஒரு முறை மோடி அரசு என்பதே இந்த தேர்தலில் எங்களது முழக்கம். பாஜகவின் முக்கிய சித்தாந்தத்தையும் அதன் தேசியவாத நிகழ்ச்சி நிரலையும் மோடி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே பிரதமர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் வழக்கம்போல் தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்களே? - ஆர்எஸ்எஸ் என்றைக்கும் தனது பணியை விளம்பரப்படுத்திக் கொள்ளாது. ஆர்எஸ்எஸ் ஒரு அரசியல் அமைப்பு அல்ல. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்கள் கருத்துகளை ஆதரிக்கும் கட்சிகளுக்காக சுதந்திரமாக பணியாற்றுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் இணைந்து செயல்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே.

தனிப்பட்ட ஒரே நபராக பாஜகவில் பிரதமர் மோடி முன்னிறுத்தப்படுவதில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு உடன்பாடு உள்ளதா? - நான் முன்பே கூறியது போல், மோடி பாஜகவின் முக்கிய சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கட்சி கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படுகிறது. இதில் என்ன தவறு? பாஜகவின் முகம் மோடி. சாதனை நாயகனை முன்னிறுத்திப் பணியாற்றுவதில் தவறில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலுக்கான பலன் பாஜகவுக்கு கிடைப்பதாகத் தெரியவில்லையே? - அயோத்தி ராமர் கோயிலுக்கான மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளை மக்கள் அறிவார்கள். எனினும் ராமர் கோயில் என்பது தேர்தலில் பலன் பெறுவதற்கான அரசியல் விவகாரம் அல்ல. ராமர் கோயிலின் பலன் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கானத‌ல்ல.

உ.பி.யிலும் பாஜகவுக்கு செல்வாக்கு குறைவதாக புகார் எழுகிறதே? - உ.பி.யில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சியால் இது சாத்தியமாகும்.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனா, அஜித் பவாரால் தேசியவாத காங்கிரஸ் என இருகட்சிகளும் பிளவுபட்டதன் தாக்கம் பாஜக கூட்டணிக்கு இந்த தேர்தலில் இழப்பை ஏற்படுத்துமா? - மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் உட்கட்சி பூசல்களால் பிளவு ஏற்பட்டுள்ளது. சரத் பவாருக்கோ அல்லது உத்தவ் தாக்கரேவுக்கோ எந்த அனுதாப வாக்கும் கிடைக்காது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த தேர்தலை விட இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெறும்.

இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஆட்சிக்கு வந்தால்...’ என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் ஊகத்தின் பேரில் வைக்கும் புகார்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா? - தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனிதத் தாக்குதல்கள் இடம்பெறக் கூடாது. மற்றபடி, வெற்றி பெற்றால், இது நடக்கும், இது நடக்காது என்று தங்கள் கணிப்பைச் சொல்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது.

2004-ல் அரசியலில் நுழைந்து எம்.பி.யாக தொடரும் ராகுல் காந்தியை பிரதமர் மோடிக்கு ஈடான தலைவர் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கருதுவது சரியா? - அரசியலில் பெரும் தலைவராக வேண்டும் என ராகுல் எண்ணுவது தவறல்ல. ஆனால், அதற்கான முயற்சியை அவர் எடுத்ததாக தெரியவில்லை. அதற்கான தகுதியும் ராகுலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், உ.பி.யில் சமாஜ்வாதி கூட்டணியுடன் 17 தொகுதியில் போட்டியிடும்போதிலும் ரேபரேலி, அமேதியின் வெற்றி மட்டுமே காந்தி குடும்பத்துக்கு முக்கியமாக உள்ளது.

மூன்றுகட்ட தேர்தல் முடியும் வரை காந்தி குடும்பத்தினர் ஒரு பிரச்சாரக் கூட்டம் கூட உ.பி.யில் நடத்தவில்லையே. இதுபோன்ற கட்சியில் முக்கியத் தலைவராக கருதப்படும் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு ஒருபோதும் ஈடாக முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x