Published : 27 May 2024 04:20 AM
Last Updated : 27 May 2024 04:20 AM
மிர்சாபூர்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி எழுதிவிடுவார்கள் என்று உத்தர பிரதேசத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சிறு வயதில் பாத்திரங்கள், பிளேட்கள் கழுவி வளர்ந்த எனக்கு ஏழை மக்களின் சிரமங்கள் நன்கு தெரியும் என்றும் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பொதுவாக, வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யார் ஆட்சியமைக்க இருக்கிறார்களோ அவர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்காக யாரும் தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அதேபோல, இண்டியா கூட்டணியினர் பற்றியும் நாட்டு மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். அவர்கள் தீவிரமான வகுப்புவாதிகள், சாதியவாதிகள், குடும்பவாதிகள். அவர்களது ஆட்சி அமைந்த போதெல்லாம், இந்த அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
முன்பெல்லாம் பிடிபட்ட தீவிரவாதிகளைக்கூட இந்த அடிப்படையில்தான் சமாஜ்வாதியினர் விடுதலை செய்து வந்தனர். அப்படி விடுவிக்க தயக்கம் காட்டிய போலீஸ் அதிகாரிகளை அவர்களது அரசு சஸ்பெண்ட் செய்தது.
ஒட்டுமொத்த உத்தர பிரதேசம்மற்றும் பூர்வாஞ்சல் மண்டலங்களை மாஃபியாவின் புகலிடமாக சமாஜ்வாதி கட்சியினர் மாற்றிவிட்டனர். அவர்களது ஆட்சியில் உயிரும், நிலமும் எப்போது பறிக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. மாஃபியாக்களையும் அவர்கள் வாக்கு வங்கிகளாக பார்த்தனர்.
மாஃபியா மீது நடவடிக்கை: பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் அஞ்சி நடுங்குகின்றனர். அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவர்கள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நில மாஃபியாக்களை ஒழித்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் தற்போது அவர்களது (இண்டியா கூட்டணி தலைவர்கள்) இலக்காகிஉள்ளது.
எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை அவர்கள் பறிக்க விரும்புகின்றனர். மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று நமது அரசியலமைப்பு தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதுபோல முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக அரசியலமைப்பையும் மாற்றுவோம்’ என்று சமாஜ்வாதி கட்சிதெரிவித்திருந்தது. தங்கள் வாக்குவங்கிகளை திருப்திப்படுத்த எஸ்சி, எஸ்டி மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க துணிந்தவர்கள் இவர்கள்.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி எழுதிவிடுவார்கள்.
ஏழைகளின் சிரமம் தெரியும்: நான் சிறு வயதில் பாத்திரங்கள், பிளேட்கள் கழுவிதான் வளர்ந்தேன். சிறுவனாக இருந்தபோது தேநீர் பரிமாறினேன். எனக்கும், தேநீருக்குமான உறவு ஆழமானது. அலாதியானது.
ஏழைகள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். ஏழை மக்களின் சிரமம்,வலி, வேதனை எனக்கு நன்கு தெரியும். அவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்
இவ்வாறு பிரதமர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT