Published : 27 Apr 2018 08:51 AM
Last Updated : 27 Apr 2018 08:51 AM
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், கூட்ட நெரிசல் காரணமாக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் 20 மணி நேரத்துக்கும் அதிகமாக காத்திருக்கும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க அரசு பஸ் நிலையத்தில் சோதனை அடிப்படையில் சர்வ தரிசன டோக்கன் மையத்தை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான உதவி கண்காணிப்பு அதிகாரி சிவக்குமார், ரவீந்திரா, மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உட்பட பல தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் தங்களது அடையாள அட்டை மூலம் டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து ஸ்ரீநிவாச ராஜு கூறும்போது, “அடுத்த ஒரு வாரத்துக்கு செயல்படும் இதில் இப்போதைக்கு தேவஸ்தான ஊழியர்கள் மட்டுமே டோக்கன் பெற முடியும். இதுகுறித்து பக்தர்களின் கருத்துக்கள் கேட்கப்படும். அதன் பிறகு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த டோக்கன் முறை பக்தர்களுக்காக அமல்படுத்தப்படும்” என்றார்.
இந்த மையத்தில் உள்ள இயந்திரத்தில் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்தால் ஒரு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் கோயிலுக்கு சென்றால், வெறும் 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து விடலாம். இதன் மூலம் பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT