Published : 26 May 2024 05:58 AM
Last Updated : 26 May 2024 05:58 AM
புதுடெல்லி: தமிழகத்தில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டாதது ஏன் என்று டெல்லிவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடமேற்கு டெல்லியில் உள்ள சக்கூர்பூரில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இதனால் சுமார் 25 வருடங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி சார்பில் சக்கூர்பூர் காலனி சாலைக்கு ‘திருவள்ளுவர் மார்க்’ எனப் பெயரிடப்பட்டது. இதையடுத்து, சக்கூர்பூர் வழியாக புதிதாக ரோஸ் நிற மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதன் சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் திருவள்ளுவர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை மத்திய அரசால் சுமார் 6 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியின் தமிழக இளைஞர் கலாச்சார அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நடேசன் கூறும்போது, “சக்கூர்பூர் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், அதன் மெட்ரோ நிலையத்துக்கும் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட வேண்டும்என்று டெல்லியின் அனைத்து தரப்பு தமிழர்களும் விரும்புகின்றனர். இது தொடர்பாக எங்கள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசு சம்பந்தபட்டவர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது தமிழகத்தில் திருவள்ளுவர் பெயரில் அரசியல் செய்யும் பாஜகவினர் எங்கள் முயற்சிக்கு உதவினால் அவரது புகழை டெல்லியிலும் பரப்ப முடியும்” என்றார்.
சக்கூர்பூர் மெட்ரோவுக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டக் கோரும் மனு கடந்த 2018-ல் தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையராக இருந்தந.முருகானந்தத்திடமும் அளிக்கப்பட்டது. இதற்காக அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மூலம் முயற்சி மேற்கொண்டு வந்தார். பிறகு அவர் சென்னைக்கு மாற்றப்பட்டதால் அப்பணி கிடப்பில் உள்ளது. இந்த மனுவின் நகலானது, டெல்லிவாழ் தமிழர்கள் சார்பில் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தக் கோரி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது.
டெல்லியில் திருவள்ளுவர் சிலை, 1975-ல் அம்மாநில அரசு சார்பில் ஆர்.கே.புரத்தின் மேற்கு பிளாக்கில் ஒரு பூங்காவில் நிறுவப்பட்டது. அங்கு பராமரிப்பு குறைபாடு காரணமாக 2010-ல் பூங்காவின் எதிரில் உள்ள டெல்லி தமிழ்ச் சங்க கட்டிட வாசலில் இடமாற்றம் செய்யப்பட்டது. இரண்டாவதாக, 1976-ல் டெல்லி கவுடில்யா மார்கில் கட்டப்பட்ட வைகை தமிழ்நாடு இல்லத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT