Published : 26 May 2024 05:43 AM
Last Updated : 26 May 2024 05:43 AM
பெங்களூரு: கர்நாடகாவில் குடகு, மைசூரு ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த பிப்ரவரியில் இருந்து மே மாதம் முதல் வாரம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இதனால் காவிரி ஆறு வறண்டதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. எனவே தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டிய காவிரி நீர் முறையாக திறக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி ஆறு உற்பத்தியாகும் தலக்காவிரி, குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, மடிக்கேரி, வீராஜ்பேட்டை ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 32.34 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதேபோல கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் கபிலாஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கபினி அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப் படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 2,509 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 6,473 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது.
இதேபோல அடுத்த சில வாரங்களுக்கு மழை தொடர்ந்து பெய்தால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும் என காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் மழை பெய்யாததால் நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT