Published : 04 Aug 2014 09:26 AM
Last Updated : 04 Aug 2014 09:26 AM

இலங்கை கட்டுரையாளரை கைது செய்ய வேண்டும்: பெங்களூரில் அதிமுகவினர் ஆவேசம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி கட்டுரை வெளியிட்ட இலங்கை கட்டுரையாளரைக் கைது செய்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழர் நலனுக்காக எழுதும் கடிதங்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரையும் அவதூறான படமும் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது; ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பெங்களூரிலும் கர்நாடக மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதிமுக மாநில செயலாளர் வா.புகழேந்தி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அரசு, அதிபர் ராஜ பக்சவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராஜபக்சவின் உருவப்படம் எரிக்கப்பட்டது. அதிமுக மாநில செயலாளர் வா.புகழேந்தி பேசும்போது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதனை மத்திய அரசு அலட்சியப்படுத்தியன் விளைவே, ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை அரசு அவதூறு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

இலங்கை அரசு தமிழக முதல்வரை மட்டும் இழிவுபடுத் தவில்லை, ஒட்டுமொத்த இந்திய மக்களையே இழிவுபடுத்தி இருக்கிறது. ஆதலால் இலங்கை யுடனான உறவை இந்தியா முறிக்க‌ வேண்டும்.அந்நாட்டுடனான‌ பொருளாதார உறவுகளை உடனடியாகத் துண்டிக்க‌ வேண்டும்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி அளிக்கக்கூடாது.மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம ரையும், தமிழக முதல் வரையும் அவமதித்த இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் மத்திய அரசு உடனடியாக முறையிட வேண்டும். இந்த அவதூறு கட்டுரையை எழுதிய ஷெனாலி டி. வடுகே-வை உடனடியாக இலங்கை போலீஸார் கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இலங்கை மீது இந்தியா உடனடியாக போர்தொடுக்க வேண்டும். இலங்கை அரசு இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிடில், கர்நாடக மாநில அதிமுகவினர் அனைவரும் ஒன்று திரண்டு இலங்கைக்கு சென்று எதிர்ப்பு தெரிவிப்போம்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x