Published : 25 May 2024 07:21 PM
Last Updated : 25 May 2024 07:21 PM
புதுடெல்லி: நடப்பு மக்களவைத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களுக்கான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவுகளை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று (மே 24) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஏற்கெனவே, மக்களவை தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்த பிறகு இந்தவழக்கு விசாரிக்கப்படும். கோடை விடுமுறை முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்" என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, மக்களவைத் தேர்தலின்போது தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதல் 5 கட்ட தேர்தல்களின்போது பதிவான வாக்குகள் தொகுதிவாரியாக வழங்கப்பட்டுள்ளன.
அதோடு, வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்முறை குறித்த உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்புகள் மற்றும் தீர்ப்பால் ஆணையம் வலுப்பெற்றதாக உணர்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடுமையான, வெளிப்படையான செயல்முறை காரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சுமார் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்யும் படிவம் 17C, அனைத்து வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும் இருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. படிவம் 17C இல் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை மாற்ற முடியாது என்றும், ஏனெனில் அவை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் விதி 49 V (2)ன் படி, வாக்குப்பதிவு முடிந்த உட் வாக்குச் சாவடியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்குக் கொண்டு செல்லப்படும்போது, வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் 17C படிவத்தின் நகலை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து ஒவ்வொரு சுற்றிலும் உள்ள முடிவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எனவே, வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவை யாராலும் மாற்ற முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT