Published : 25 May 2024 05:57 PM
Last Updated : 25 May 2024 05:57 PM
காங்க்ரா (இமாச்சலப் பிரதேசம்): ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது என்றும், பொய்யான விஷயத்தை பிரச்சினையாக்கும் பாரம்பரியத்தை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பின், இந்த நாட்டின் அரசியலே மாறிவிட்டது. இதற்கு முன், அரசியல் கட்சிகள், உண்மையான பிரச்சினைகளை மக்கள் முன் திரித்துப் பேசுவார்கள். பொய்யான விஷயத்தை மட்டுமே பிரச்சினையாக்க வேண்டும் என்ற புதிய பாரம்பரியத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் தான் அக்னிவீரர் திட்டம்.
அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு 75% அக்னிவீரர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும், அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்றும், இந்த திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்றும் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அக்னிவீரர் திட்டம் குறித்த ராகுல் காந்தியின் கருத்து முற்றிலும் தவறானது. இத்தகைய கருத்து நாடு முழுவதும் பரப்பப்படுகிறது.
100 பேர் அக்னிவீரராக மாறினால், அவர்களில் 25% பேர் ராணுவத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள் என்பது திட்டம். மீதமுள்ள 75% பேருக்கு, பாஜக ஆளும் மாநிலங்கள் தங்கள் மாநில காவல்துறையில் 10-20% இடஒதுக்கீடு வழங்கியுள்ளன. மத்திய அரசின் துணை ராணுவப் படையிலும் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு தவிர, அரசுப் பணிக்கு முயலும்போது, வயது, தேர்வு போன்ற தேர்வு செயல்முறைகளில் நிறைய தளர்வுகளை அவர்கள் பெறுவார்கள். உடல் பரிசோதனைகள் மூலம் அவர்கள் செல்ல வேண்டியதில்லை.
இதற்குப் பிறகு, வேலை கிடைக்காத அக்னிவீரன் இருக்க வாய்ப்பில்லை. பல செக்யூரிட்டி நிறுவனங்களும், அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளன. 4 வருடங்கள் பணியில் இருக்கும்போது அவர்கள் கணிசமான சம்பளத்தை வாங்குவார்கள். அதன் பிறகு நிரந்தர வேலை கிடைக்கும். ஆனால், தனது கட்சியின் நலனுக்காக ராகுல் காந்தி முழுப் பொய்களைச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்" என தெரிவித்தார்.
முன்னதாக, காங்க்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "5 கட்ட தேர்தல்களில் மோடி 310-ஐ தாண்டிவிட்டார். காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது. ஆறாவது மற்றும் ஏழாவது கட்டத் தேர்தல்களில் மோடி 400ஐத் தாண்டிவிடுவார். ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வந்தவுடன் மோடி, மூன்றாவது முறையாக பிரதமராவார்.
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்திப்பார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் நாங்கள் தோல்வியடைந்தோம், இல்லையெனில் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறுவார். இமாச்சல சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் தோற்றால் அவை சரியில்லை என்றும் சாதிப்பார்கள்.
ஊழல்கள், ஊழல்கள், ஊழல்கள். இந்த வேலையை மட்டுமே காங்கிரஸ் செய்தது. அதன் அனைத்து கூட்டாளிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ளனர். மறுபுறம், மோடி மீது எதிரிகளால் கூட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியவில்லை.
மோடி தனது ஆட்சியில், 10 கோடி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கினார். 14 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கினார். 12 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதியும், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. 2014ல் நீங்கள் மோடியை நாட்டின் பிரதமராக்கிய பிறகு, அவர்தான் 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, நாட்டு ராணுவ வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கவுரவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கான பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுதான் பாஜகவின் பழக்கம்.
பாகிஸ்தான் அணுகுண்டு வைத்துள்ளதாகவும், எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச வேண்டாம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் எங்களை பயமுறுத்தப் பார்க்கின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் மோடியின் படைவீரர்கள். அணுகுண்டுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370ஐ அகற்றாதீர்கள், அங்கு ரத்த ஆறுகள் ஓடும் என்று இண்டியா கூட்டணியினர் கூறி வந்தனர். 5 வருடங்கள் ஆகிறது... இரத்த ஆறுகளை மறந்து விடுங்கள், ஒரு கூழாங்கல்லை கூட வீச யாருக்கும் தைரியம் இல்லை. மோடி, இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தையும் நக்சலிசத்தையும் ஒழித்திருக்கிறார். இன்று நாடு முழுவதும் மோடி, மோடி என கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இது வளர்ந்த இந்தியாவுக்கான முழக்கம், தன்னிறைவு இந்தியாவுக்கான முழக்கம், 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை முழக்கம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT