Published : 25 May 2024 04:25 PM
Last Updated : 25 May 2024 04:25 PM
சிம்லா: இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, "சிம்லாவின் அழகையும் சுற்றுச்சூழலையும் பார்க்கும்போது இது சிம்லாவா அல்லது சுவிட்சர்லாந்தா என்று எண்ணத் தோன்றுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். சுற்றுலா வளர்ச்சி அடைந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் வளருவார்கள்.
இமாச்சலப் பிரதேச மக்கள் 1951-ஆம் ஆண்டு முதன்முதலில் வாக்குரிமையைப் பெற்றனர். ஜவஹர்லால் நேருவின் முதல் தேர்தல் கூட்டம் 1951-ல் சிம்லாவில் நடைபெற்றது. சமூக நீதியை உயர்த்தும் வேட்பாளர்களுக்கு ஹிமாச்சல் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அப்போது நேரு பேசினார்.
அரசியல் சாசனத்தை காப்பாற்றவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் காங்கிரஸ் கட்சி தற்போது போராடி வருகிறது. ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள 7-ம் கட்ட வாக்குப்பதிவின்போது, கை சின்னத்தில் வாக்களித்து காங்கிரஸை அமோக பெரும்பான்மையுடன் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இண்டியா கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்.
கடந்த காலங்களில் ராணுவத்தில் பணி என்பது நிரந்தர பணியாகவும், ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாகவும் இருந்தது. ஆனால், நரேந்திர மோடி 'அக்னி வீரர்' திட்டத்தைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் முடித்துவிட்டார்.
இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் இருந்தனர். இந்திரா காந்தி பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாகப் பிரித்தார். வங்கதேசத்தை உருவாக்கினார். இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார். 56 அங்குல மார்பு எங்கே? இந்தியா தனது நிலத்தை இழக்கக் காரணமாக இருப்பவர்களுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இமாச்சலப் பிரதேசம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, வெள்ளத்திற்குப் பிறகு மத்திய அரசிடம் ரூ.10,000 கோடி உதவி கோரினார். ஆனால், மத்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை" என குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT