Published : 25 May 2024 10:15 AM
Last Updated : 25 May 2024 10:15 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவாகியுள்ளது.
உத்தர பிரதேசம்: 12.33%
ஹரியாணா: 8.31%
மேற்கு வங்கம் 16.64%
பிஹார்: 9.66%
டெல்லி: 8.94%
ஒடிசா: 7.43%
ஜார்க்கண்ட்: 11.74%
காஷ்மீர்: 8.89%
வாக்களித்த முக்கியப் பிரமுகர்கள்: தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் மகள் மிராயா மற்றும் மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா, கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம் காம்பீர், டெல்லி பாஜக தலைவர் பன்சூரி ஸ்வராஜ், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எனப் பலரும் வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற.. வாக்களித்த பின்னர் பிரியங்காவின் மகள் மிராயா அளித்த பேட்டியில், “சோம்பலாக இருந்துவிடாதீர்கள். வாக்களிக்க வாருங்கள். மாற்றத்துக்காக வாக்களியுங்கள்” என்றார். மிராயா முதன்முறை வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரைஹான் ராஜீவ் வத்ரா கூறுகையில், “இது முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்களித்து நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வாக்களியுங்கள்” என்றார்.
டெல்லியில் இந்த முறை ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி இணைந்து களம் காண்கிறது. இதுவரை தனித்து போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
வாக்களித்த பின்னர் பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் காங்கிரஸுக்கும், நீங்கள் அனைவரும் ஆம் ஆத்மிக்கும் வாக்களிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே எனக் கேட்க, “நாங்கள் எங்களது குறைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அரசமைப்புக்காக, ஜனநாயகத்துக்காக வாக்களிக்கிறோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT