Published : 25 May 2024 04:59 AM
Last Updated : 25 May 2024 04:59 AM
புதுடெல்லி: வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்), காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் 2 அமைப்புகளும் இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். வாக்குச்சாவடி (பூத்) வாரியாக பதிவான வாக்குகள் விவரத்தை வெளியிட வேண்டும். இதற்காக, வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய விடுமுறை கால உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த வாதம் - தேர்தல் ஆணையம் தரப்பு: ஒவ்வொரு தேர்தலின்போதும், இதுபோன்ற சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்புகின்றனர். இதனால், மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைகிறது. தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் கூட வாக்கு சதவீதம் குறைவதற்கு இதுபோன்ற மனுக்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன.
இத்தகைய மனுக்கள், மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக, குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. அதனால், வாக்குச்சாவடிகளுக்கு வருவதற்கு மக்கள் தயங்குகின்றனர். எனவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது.
மனுதாரர் தரப்பு: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கே நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு செல்லாததற்கு காரணமும் அதுதான். தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகங்களை இப்படிகொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு வாதம் நடந்தது.
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தேர்தல் முடிந்த பிறகு விசாரணை: ஏற்கெனவே, மக்களவை தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்த பிறகு இந்தவழக்கு விசாரிக்கப்படும். கோடை விடுமுறை முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT