Published : 24 May 2024 06:25 AM
Last Updated : 24 May 2024 06:25 AM
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் பெண் நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் சோனாக்சுரா கிராமத்தைச் சேர்ந்த ரதிபாலா அர்ஹி (38) என்பது தெரியவந்தது.
தம்லுக் மக்களவை தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் 6 -வது கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்பாஜகவைச் சேர்ந்த பெண்ஒருவர் கொலை செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே கோபத்தை அதிகரித்துள்ளது.
இந்த கொலைக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியை (டிஎம்சி)சேர்ந்தவர்கள்தான் காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அவர்களை கைது செய்யக்கோரி பாஜகவினர்நேற்று பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக நந்திகிராமில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. முழு அடைப்புக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு பின்பு அது திரும்பப் பெறப்பட்டது.
கலவரத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழு பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT