Published : 23 May 2024 06:06 PM
Last Updated : 23 May 2024 06:06 PM

“இந்தியா திரும்பி வந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொள்...” - பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை

தேவகவுடா | கோப்புப் படம்

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவரது தாத்தாவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடந்த 18-ம் தேதி ஊடகங்களில் நான் பேசினேன். அப்போது நான் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தேன். அதிர்ச்சி மற்றும் வலியில் இருந்து நான் சற்று விடுபட எனக்கு நேரம் தேவைப்பட்டது. எனக்கு மட்டுமல்ல, எனது ஒட்டுமொத்த குடும்பம், கட்சியினர், நண்பர்கள் என அனைவருக்கும் அது அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்தியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன். எனது மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் இதையே முதல் நாள் முதல் கூறி வருகிறார்.

கடந்த சில வாரங்களாக மக்கள், எனக்கு எதிராகவும், எனது குடும்பத்துக்கு எதிராகவும் கடினமான சொற்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதனை நான் நன்கு அறிவேன். அவர்களை தடுக்க நான் விரும்பவில்லை. பிரஜ்வலின் செயல்பாடுகள் குறித்தும், அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாத நிலையில், நான் மக்களை சமாதானப்படுத்தவும் முடியாது. நான் கடவுளை நம்புகிறேன். அவருக்குத்தான் எல்லா உண்மைகளும் தெரியும்.

கடந்த சில வாரங்களாக தீங்கிழைக்கும் வகையில் பரப்பப்படும் அரசியல் சதிகள், மிகைப்படுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள், பொய்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். அதைச் செய்தவர்கள் கடவுளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். தங்கள் செயலுக்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த நேரத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். சட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இது எனது கோரிக்கை அல்ல; எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு அவர் செவிசாய்க்கவில்லை என்றால், அவர் எனது கோபத்தையும் குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் சந்திக்க நேரிடும்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆனால். குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். அவருக்கு என்மீது ஏதேனும் மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும். அவருக்கு எதிரான விசாரணையில் நானோ, எனது குடும்பத்தினரோ எந்த தலையீடும் செய்ய மாட்டோம். மக்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதுதான் அனைத்தையும்விட தற்போது முக்கியம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலான எனது அரசியல் வாழ்வில் மக்கள் எனக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள். உயிர் உள்ளவரை அவர்களின் நம்பிக்கை குறைய விட மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x