Published : 23 May 2024 04:37 AM
Last Updated : 23 May 2024 04:37 AM

பிரச்சாரத்தின்போது சாதி, மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும்: பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரங்களின்போது சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்தி முடிக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. திட்டமிட்டபடி, மக்களவை தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1-ம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜூன் 4-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டஅனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்ச்சையான கருத்துகள்: இந்நிலையில், பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் சர்ச்சையான கருத்துகளை பேசி வருவதாக புகார்எழுந்துள்ளது. சாதி, மதம் தொடர்பாக வெறுப்பை தூண்டும் கருத்துகளை பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேசி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்தியதேர்தல் ஆணையம் நேற்று அறிவுரை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசும்போது சரியானவார்த்தைகளை பேசுவதற்கும்,அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தை பேணுவதற்கும், முறையான குறிப்புகளை கட்சித் தலைமை வெளியிட வேண்டும்.

சாதி, மதம் தொடர்பான வெறுப்பு கருத்துகளை கட்சிகளின் தலைவர்களும், நட்சத்திரப் பேச்சாளர்களும் பேசாமல் தவிர்க்க வேண்டும். சாதிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக, நாட்டின் சமூககட்டமைப்பு, தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

பேச்சாளர்களுக்கு அறிவுரை: ‘இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டுவிடும்’ என்பதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம். இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை எந்த கட்சியும் தெரிவிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கட்சியின் பேச்சாளர்கள் தெரிவிக்க வேண்டாம்.

இதுதொடர்பாக தங்களது அதிகாரப்பூர்வ பேச்சாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்க வேண்டும்.

மதம், இனம் சார்ந்த பிரச்சாரங்களை எந்த கட்சியும், எந்த பேச்சாளர்களும் இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் ‘அக்னி வீர்’ திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேசும்போது, நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து பேசி அரசியலாக்க கூடாது.

இவ்வாறு அக்கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சித் தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று இருகட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

பிரச்சாரத்தின்போது, அவதூறு, சர்ச்சை கருத்துகளை தெரிவிக்க கூடாது. வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று அறிவுறுத்தி, பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x