Published : 22 May 2024 05:11 AM
Last Updated : 22 May 2024 05:11 AM
புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப் போவதாக பாஜக மூத்த தலைவரும், வேட்பாளருமான சாம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக சாம்பித் பத்ரா களமிறங்கியுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் புரி வந்த பிரதமர் மோடி, மிகப்பிரம்மாண்டமான வாகன பேரணியில் கலந்துகொண்டார். வாகனப் பேரணி முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் சாம்பித் பத்ரா பேசும்போது புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உலகமே போற்றி வணங்கும் ஜெகந்நாதரை இழிவுபடுத்தியதாக கண்டனக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடக பக்கத்தில் சாம்பித்பத்ரா காணொலியை பகிர்ந்து அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து சாம்பித் பத்ரா, பிரதமர் மோடி புரி ஜெகந்நாதரின் பக்தர் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது கருத்துக்குபல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், ஆட்சேபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு சாம்பித் பத்ரா நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தனது தவறுக்கு பிராயச்சித்தம் செலுத்தும் வகையில் 3 நாட்கள் விரதம் இருக்கப் போவதாகவும் சாம்பித் பத்ரா அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சாம்பித் பத்ரா பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் சமூக வலைதளமான எக்ஸ் பதிவின் கீழ் பதில் அளித்துள்ள சாம்பித் பத்ரா கூறும்போது, “நவீன் ஜி வணக்கம்! பிரதமர் மோடியின் வாகனப் பேரணி மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நான் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துக் கொண்டிருந்தேன்.
அனைத்து இடங்களிலும் பிரதமர் மோடி ஜெகந்நாதரின் தீவிர பக்தர் என்றே சொல்லி வந்தேன். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக மாற்றி கூறிவிட்டேன். உங்களுக்கும் இது புரியும் என்று எனக்கு தெரியும். ஒன்றும் இல்லாத பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்குமே சிலநேரங்களில் நாக்கு குளறும். நன்றி” இவ்வாறு சாம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT