Published : 21 May 2024 05:19 PM
Last Updated : 21 May 2024 05:19 PM

மம்தா குறித்து அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், "மம்தா பானர்ஜி, நீங்கள் உங்களை எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்? உங்கள் கட்டணம் ரூ.10 லட்சம், ஏன்? உங்கள் மேக்கப்புக்கு அதிக செலவு ஆவதாலா? மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா என நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன்" என கூறி இருந்தார்.

அபிஜித் கங்கோபாத்யாயின் இந்த பேச்சு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், "கங்கோபாத்யாயின் கருத்து ஒவ்வொரு அர்த்தத்திலும் கண்ணியத்திற்கு அப்பாற்பட்டது. இது ஒரு மோசமான ரசனை. அதோடு, மாதிரி நடத்தை விதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அதன் ஆலோசனையின் விதிகளை மீறும் செயல்.

தரம் தாழ்ந்த தனிப்பட்ட தாக்குதலில் அபிஜித் கங்கோபாத்யாய் ஈடுபட்டுள்ளார் என்பதும், மாதிரி நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்பதும் உறுதியாகிறது. அபிஜித் கங்கோபாத்யாயாவின் கல்வி மற்றும் அவர் வகித்த பதவி ஆகியவற்றின் பின்னணியைக் கொண்டு பார்க்கும்போது, அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து இதுபோன்ற அருவருப்பான வார்த்தைகள் வந்துள்ளதை எண்ணி தேர்தல் ஆணையம் வேதனைப்படுகிறது. அவர் இன்று (மே 21) மாலை 5 மணி முதல் 24 மணி நேரங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதிக்கிறது" என தெரிவித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவுக்கு உத்தரவின் நகலை அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், பிரசாரத்தின்போது இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், பாஜகவின் அனைத்து வேட்பாளர்கள் மற்றம் பேச்சாளர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாய், சில மாதங்களுக்கு முன்புதான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x