Published : 21 May 2024 09:25 AM
Last Updated : 21 May 2024 09:25 AM
புதுடெல்லி: “மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி. 5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி முற்றிலுமாக அதன் மதிப்பிழந்து, தளர்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26,மே 7, 13 ஆகிய நாட்களில் 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்த நிலையில், 5-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
உத்தர பிரதேசம் 14, மகாராஷ்டிரா 13, மேற்கு வங்கம் 7,பிஹார், ஒடிசா தலா 5, ஜார்க்கண்ட் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 என மொத்தம் 49 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இரவு 8 மணி நிலவரப்படி, 5-ம் கட்ட தேர்தலில் 57.57 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் இன்று வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (மே.21) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நேற்று நடந்து முடிந்த 5ஆம் கட்டத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஆதரவு மேலும் மேலும் வலுவடைகிறது. மத்தியில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்தச் சூழலில் இண்டி கூட்டணி வாக்குவங்கி அரசியலில் ஈடுபட முயற்சிக்கலாம். ஆனால் இந்திய மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். இண்டி கூட்டணி முற்றிலும் மதிப்பை இழந்து, தளர்ந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் அதிகளவில் வாக்குப் பதிவானதை சுட்டிக்காட்டிப் பகிர்ந்த பதிவை மேற்கோள்காட்டி, “ஜனநாயக மதிப்பீடுகளை காப்பாற்றிய பாரமுல்லா சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இதுபோன்ற பங்களிப்பு சிறப்பான போக்கு” என்று கூறியுள்ளார்.
மக்களவைக்கான 6, 7-ம் கட்ட வாக்குப்பதிவு மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT