Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

எழுத்தாளர் அருந்ததி ராய் சர்ச்சை பேச்சு: வீடியோவை ஆய்வு செய்ய போலீஸ் நடவடிக்கை

கேரளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சொற்பொழிவின்போது மகாத்மா காந்தி குறித்து அவதூறான கருத்தை வெளியிட்டதாக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் 19-வது நூற்றாண்டில் தலித் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர் அய்யன்காளியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், மகாத்மா காந்தியை பற்றி விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரையடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து திருவனந்தபுரம் நகர காவல் துறை ஆணையர் எச்.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: “பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் நிகழ்த்திய சொற்பொழிவு அடங்கிய வீடியோ பதிவை தருமாறு, அதன் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளோம். வீடியோவை பார்த்த பிறகுதான், அவர் ஆட்சேபத்துக்குரிய வகையில் மகாத்மா காந்தி பற்றி கருத்து தெரிவித்திருக்கிறாரா என்பது பற்றி அறிய முடியும்” என்றார்.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்த அருந்ததி ராயை கண்டித்து மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா பகுதியில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவர் எபி ஜோஸ் கூறும்போது, “புகார் தெரிவிக்கும் வரை காத்திருக்காமல், போலீஸார் தாமாகவே முன்வந்து அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்றார்.

எழுத்தாளர் கே.கே.கொச்சு கூறும்போது, “மகாத்மா காந்தி மீது விமர்சனம் முன்வைக்கப்படுவது இது முதன்முறையல்ல. ஒருவர் தனது கருத்தைத் தெரிவித்ததற்காக, அவர் மீது நடவடிக்கை எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x