Published : 20 May 2024 04:30 AM
Last Updated : 20 May 2024 04:30 AM

சென்னை வருவதற்கு திட்டமிட்ட 4 வங்கதேசத்தினர் கைது: திரிபுரா ரயில் நிலையத்தில் சிக்கினர்

அகர்தலா: சென்னை வருவதற்காக திட்டமிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் திரிபுரா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த ஜஷாங்கிர், உசைன், ஓம்ரான் உசைன், ரியாத் உசைன் ஆகியோர் இந்திய தரகர் ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் மூலமாக எல்லையை கடந்து திரிபுரா மாநிலத்துக்குள் நுழைந்துள்ளனர். கடந்த 17-ம் தேதி இரவு அகர்தலா ரயில் நிலையத்தில், செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றிருந்தது. அதில் ஏறுவதற்காக இவர்கள் 5 பேரும் அவசரமாக சென்றுள்ளனர்.

இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதலில் தங்களை இந்தியர்கள் என்று கூறிய அவர்கள், பின்னர் தாங்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். செகந்திராபாத் வந்து அங்கிருந்து சென்னை செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, வெளிநாட்டினர் சட்டம் உட்பட பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, கடந்த 11-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரும், இந்திய தரகர் ஒருவரும் திரிபுராவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அகர்தலா ரயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. கடந்த 5-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டை சேர்ந்த பலர், இந்திய தரகர்கள் உதவியுடன் திரிபுரா வழியாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஊடுருகின்றனர். எல்லை கடந்து வந்ததாக திரிபுராவில் கடந்த ஜனவரி முதல் 1,018 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 498 பேர் வங்கதேசத்தினர். 124 பேர் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்தவர்கள். 396 பேர் இந்தியர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x