Published : 29 Apr 2018 07:28 PM
Last Updated : 29 Apr 2018 07:28 PM
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அரசு நிர்ணயித்த காலக்கெடுக்கு 12 நாட்களுக்கு முன்பாகவே மின்வசதி பெற்றுவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வரும் போது, நாட்டில் 18 ஆயிரத்து 452 கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் இருந்தது. அடுத்த 1000 நாட்களில் இந்த கிராமங்கள் அனைத்துக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிய இன்னும் 12 நாட்கள் இருந்த நிலையில், கடைசியாக கிராமமாக மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சேனாபட்டி மாவட்டம், லீசாங் கிராமத்துக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து நாட்டில் மின் இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 28-ம் தேதி வரலாற்றில் முக்கியமான நாளாகும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் மின் இணைப்பு பெற்றுவிட்டன. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான நாளாக அமைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, 18 ஆயிரத்து 452 கிராமங்களுக்கு மின் இணைப்பு இல்லாமல் இருந்தது. இப்போது மின் இணைப்பு வழங்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துவிட்டது.
தீன தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மின்வசதி அளிக்க ரூ. 75,893 கோடி ஒதுக்கப்பட்டது இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு என்பது குறைந்தபட்சம் வீடுகளுக்கு அடிப்படை மின் இணைப்பு, பொது இடங்கள், பள்ளிகள், உள்ளாட்சி நிர்வாக கட்டிடங்கள், சுகாதார மையங்கள் ஆகியவற்றுக்கு மின் இணைப்பு வழங்குவதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT