Published : 25 Apr 2018 09:47 AM
Last Updated : 25 Apr 2018 09:47 AM
இ
ந்த வாரம் வெளிவந்த ஒரு தீர்ப்பில் நாக்பூரில் நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கில், சுதந்திரமான விசாரணை கோரிய பொது நலன் வழக்குகளைக் கண்டித்திருக்கிறார் நீதிபதி சந்திரசூட். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் இவரும் ஒருவர். ஒரு துளியும் ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தி, நீதித்துறையையே கேவலப்படுத்துவதாக பொதுநலன் மனு தாக்கல் செய்தவரையும் அவரது வழக்கறிஞர்களையும் விளாசியிருக்கிறார்.
பொது நலன் மனுக்களைத் தள்ளுபடி செய்ததோடு, நீதித்துறையை வக்கீல்களிடம் இருந்தும் சமூகச் செயற்பாட்டாளர்களிடம் இருந்தும், ஊடகங்களிடம் இருந்தும் காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தீர்ப்பில் சந்திரசூட் கூறியுள்ளார்.
நீதிபதி லோயா வழக்கில் மனுதாரர்களையும் அவர்களின் வழக்கறிஞர்களையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ள முடியும் என்றாலும் பெரிய மனதுடன் அவர்களை விட்டுவிடுவதாகச் சொல்லியிருக்கிறார் நீதிபதி.
தீர்ப்பின் சாதக பாதகங்களை நாம் விவாதிக்கப் போவதில்லை. சமீப காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் அரசுக்குத் துதி பாடுபவர்களாகவும், சமூகச் செயற்பாட்டாளர்களாகவும் இருவேறு பிரிவுகளாகப் பார்க்கப்படுகிறார்கள் என பத்திரிகையாளர் பர்க்கா தத் கூறியிருக்கிறார். நீதித்துறையும் இதேபோல் இருவேறு பிரிவுகளாகப் பார்க்கப்பட்டால், அது மிகப் பெரிய பிரச்சினையாகிவிடும். நீதித்துறைக்கு உள்ளிருந்து வரும் எதிர்ப்பே மிகப் பெரிய அபாயம். இதற்குத்தான் நீதிபதிகள் கோபப்பட வேண்டும்.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முதல் விஷயம், பொது நலன் மனுக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அரசியல், தனிநபர், கருத்தியல் சண்டைகளை பொது நலன் வழக்குகள் மூலம் நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இரண்டாவது விஷயம், நீதிபதிகள் பொய் சொல்ல மாட்டார்கள். மூன்றாவதாக, நீதித்துறை முழுவதையும் ஒருவரே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமே இல்லை.
நீதித்துறையை உன்னிப்பாகக் கவனித்து வரும் சக பத்திரிகையாளர் முனீஷ் சிப்பெர் சில உதாரணங்களைத் தெரிவித்தார். கடந்த ஓராண்டாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) உச்ச நீதிமன்றம்தான் நிர்வகித்து வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.
குடிமகன்களின் கடைசி புகலிடமான பொது நலன் வழக்கு என்ற அருமையான யோசனை 1980-களின் மத்தியில்தான் உருவானது. பல நீதிபதிகள் இதை ஊக்குவித்தனர். தங்களின் அதிகாரத்தையும் அதிகரித்துக் கொண்டனர்.
டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. 10 தலைமை நீதிபதிகள் மாறிய பிறகும் இன்னும் அந்தக் குழு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. காற்று மாசு மேலும் மோசமானதுதான் மிச்சம். சட்டவிரோதக் கட்டுமானம், ஆக்கிரமிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் நிலைமையும் இதுதான். இந்த இரண்டு விஷயங்களிலும் நீதிமன்றம் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் மக்கள் அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்வதுபோல் நீதிமன்றத்தைக் குறை கூற ஆரம்பித்து விட்டார்கள். பொது நலன் வழக்குகள் அதிகரித்துவிட்டன. இதற்கு விளம்பரத்தை விரும்பும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டும் காரணம் அல்ல.
அடுத்ததாக, நீதிபதிகள் பொய் சொல்ல மாட்டார்கள் எனத் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். நீதித்துறை நிர்வாகம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் புகார் எழுப்பினார்களே.. அவர்களுக்கும் இது பொருந்தும் தானே? . அவர்களின் கேள்விகளுக்குப் பதில் வேண்டும். அவை விவாதிக்கப்பட வேண்டும்.
நீதிபதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், அதை வழக்கறிஞர்களும் மனுதாரர்களும் தங்களுக்குச் சாதகமாகத்தான் பயன்படுத்துவார்கள். துறைகளுக்கு இடையே மோதல் இருப்பது நல்லதுதான். ஆனால், ஒரு துறை பலவீனமானால், அடுத்த துறை தனது பலத்தை காட்டத் தொடங்கும். அதுதான் இப்போது நடக்கிறது. நீதிபதிகளுக்குள் பிரச்சினை. அதைப் பார்த்து அரசியல்வாதிகள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.
மூன்றாவது விஷயத்துக்கு வருவோம். ஒருவரே முழு நீதித்துறையையும் நிர்வகிக்கிறார் என்ற குற்றச்சாட்டு தவறு. அது சாத்தியமே இல்லை என்கிறது உச்ச நீதிமன்றம். அது உண்மைதான். ஆனால் அதற்கும் விதி விலக்கு உண்டு. அவர் இந்திரா காந்தி. ஹெச்.ஆர். கன்னா என்ற நீதிபதியின் துணிச்சல்தான் துருக்கி போல் இந்தியா மாறாமல் காப்பாற்றியது. இன்றைய இந்தியாவில், நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க, கன்னாபோல் ஒருவரல்ல, பல நீதிபதிகள் தேவை.
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT