Published : 02 Apr 2018 08:11 AM
Last Updated : 02 Apr 2018 08:11 AM

தெலங்கானாவில் புதிய கட்சி உதயமாகிறது: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலங்கானாவில், தெலங்கானா போராட்ட சமிதியின் தலைவர் கோதண்டராம் புதிய கட்சி தொடங்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட உள்ளார்.

தெலங்கானா தனி மாநில போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் கோதண்டராம். இவர் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். இவருடன் இணைந்து கே.சந்திரசேகர ராவ் முதலில் தெலங்கானா போராட்ட சமிதி மூலம் தனி மாநில போராட்டங்களில் ஈடுபட்டார். இதன் மூலம் அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், வணிகர்கள், விவசாய சங்கத்தினர் ஒன்று திரட்டப்பட்டனர் பின்னர் படிப்படியாக தெலங்கானா போராட்டம் வலுவடைந்தது. இதைத் தொடர்ந்து தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதுவே பின்னர் தனிக்கட்சியாக உருவாகி, அதன் தலைவர் கே.சந்திரசேகர ராவ், தெலங்கானா முதல்வராக பதவி வகிக்கிறார்.

இப்போது முதல்வர் சந்திரசேகர ராவுக்கும், தெலங்கானா போராட்ட சமிதியின் தலைவர் கோதண்டராமுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஆளும் கட்சியின் சில அதிகார மீறல்களை கோதண்டராம் கேள்வி கேட்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கோதண்டராம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால் புதிய கட்சி தொடங்குவது என அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்து முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இவரது கட்சிக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து கட்சியின் பெயரை இன்று அறிவிக்க இருப்பதாக கோதண்டராம் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவரது கட்சியின் பெயர் ‘ஜன சமிதி’ யாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வரும் 4-ம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தவும் 29-ம் தேதி ஹைதராபாத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் கோதண்டராம் திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x