Published : 18 May 2024 03:27 PM
Last Updated : 18 May 2024 03:27 PM
புதுடெல்லி: மே 21 வரை வடமாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியின் நஜாப்கர் பகுதியில் நாட்டிலேயே அதிகமாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், “மே 21ம் தேதி வரை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியின் பல பகுதிகள் உட்பட வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். மே 21ம் தேதி வரை உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத், சில பகுதிகளில் வெப்ப அலைகள் வீசும். மே 20 வரை பிஹாரிலும், ஜார்கண்ட்டில் மே 19 - 20 வரை இரண்டு நாட்களும், மேற்கு வங்கத்தில் 3 நாட்களும் (மே 21 வரை), ஒடிசாவில் இரண்டு நாட்களும் (மே 20, 21) வெப்ப அலை வீசும்” என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், மேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்டும், பஞ்சாப், டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத்தின் வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், மத்திய பிரதேஷ், ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
நாட்டிலேயே அதிக வெப்பமான இடம்: வெள்ளிக்கிழமை தென்மேற்கு டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் 47.4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் கடுமையான வெப்பம் பதிவானது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக வெப்பமான இடமாக மாறியது நஜாப்கர் பகுதி. இதுதவிர ஆக்ராவில் 46.9 டிகிரி செல்சியஸ், சண்டிகரில் 44.5 டிகிரி செல்சியஸ், இமாச்சலின் உனாவில் 43.2 டிகிரி செல்சியஸ் என்று வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அதிகப்படியான வெப்பத்தால் வடஇந்தியாவில் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் அவற்றை பராமரித்து வருவதில் தீவிரம் காட்டிவருகின்றனர் பூங்கா ஊழியர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT