Published : 18 May 2024 01:20 PM
Last Updated : 18 May 2024 01:20 PM

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஜெ.பி. நட்டா

இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெ.பி. நட்டா.

காங்க்ரா(இமாச்சலப் பிரதேசம்): நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, “இங்கு நிரம்பி வழியும் உற்சாகம் மற்றும் ஆற்றலைப் பார்க்கும்போது, இந்த தொகுதியின் பாஜக வேட்பாளரான ராஜீவ் பரத்வாஜ் வெற்றிபெறப் போவது உறுதி என்ற தீர்மானம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், இமாச்சலப் பிரதேசத்தின் 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வேண்டும். மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவோம். அவரது தலைமையில் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி அழைத்துச் செல்லும் உறுதியை நிறைவேற்றுவோம்.

மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் அரசியல் மாறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்திய அரசியலின் கலாச்சாரம் மற்றும் வரையறையை மாற்றி, சிறந்த இந்தியாவை நோக்கி நாட்டை அழைத்துச் செல்ல வழி வகுத்துள்ளார். சர்வதேச நெருக்கடிகள் காரணமாக உலகப் பொருளாதாரம் இன்று திகைத்து நிற்கிறது.

ஆனால் மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து இன்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மருந்து ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. உலகின் மிக மலிவான மற்றும் பயனுள்ள மருந்து இன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. மோடி தலைமையில், நாட்டில் ஏழைகளுக்கு 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் அனைத்து வசதிகளுடன் கூடியவை. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தருவோம் என்றும், நிரந்தரக் கூரை இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் மோடி உறுதியளித்துள்ளார்.

இன்று, இந்தியாவில் உள்ள 10 கோடியே 74 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி ஏழை மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தீவிர நோய் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று மோடி உறுதியளித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் ரூ. 400 கோடி செலவில் ஐஐஎம் கட்டப்படுகிறது. இமாச்சலில் 5 ஆண்டுகளில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இண்டியா கூட்டணி ஆணவக் கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் குடும்பம் சார்ந்த கட்சிகள். அவற்றுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊழலை அகற்றுங்கள் என்கிறார் மோடி. ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறது அந்த கூட்டணி.

தற்போதெல்லாம், தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரசியல் சாசன புத்தகத்துடன் ராகுல் காந்தி உலா வருகிறார். இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதியுள்ளார். ஆனால் ராகுல் காந்தியின் காங்கிரஸ் அரசு, ஆந்திராவில் 4 முறை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது. கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க அவர்களின் அரசு முயற்சிக்கிறது" என குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x