Published : 18 May 2024 08:51 AM
Last Updated : 18 May 2024 08:51 AM

ஹரியாணாவில் பேருந்து தீ பிடித்து விபத்து: 8 பேர் பலி; பலர் காயம்

ஹரியாணா: ஹரியாணா மாநிலத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு திரும்பிச் சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து போலீஸ் தரப்பில், ஹரியாணா மாநிலம் குண்டாலி - மானேஸர் - பால்வால் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த விபத்து நடந்துள்ளது. ஹரியாணாவின் நூ நகரில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் தீப்பிடித்துள்ளது.

அதிலிருந்த பயணிகள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா, பிருந்தாவனுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு பயணிகள் பஞ்சாப் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் குழந்தைகள், பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 60 பேர் இருந்துள்ளனர். 8 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், “அதிகாலை 1.30 மணியளவில் வண்டியில் ஏதோ புகைவது போல் உணர்ந்தேன். அதற்குள் பேருந்தும் நிறுத்தப்பட்டது. அனைவரும் இறங்குவதற்குள் பேருந்து மளமளவென தீக்கிரையாகியது. பேருந்தின் பின்புறத்தில் தீப்பற்றியுள்ளது. இதனை கவனித்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர்தான் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்து வண்டியை நிறுத்தச் செய்துள்ளார். நாங்கள் 10 நாட்கள் புனித யாத்திரைக்காக இந்தப் பேருந்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தோம். திரும்பும்போது இந்த விபத்து நடந்துவிட்டது” என்றார் வேதனையுடன்.

விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி கூறுகையில், “பேருந்து தீப்பிடித்ததைப் பார்த்ததும் நாங்கள் எல்லோரும் ஓடிச் சென்று வண்டியை நிறுத்தினோம். முடிந்தவரை ஜன்னல் வழியாக சிலரை வெளியேற்றினோம். ஆனால் அதற்குள் தீயின் தாக்கம் அதிகமாகிவிட்டது. காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் 3 மணி நேரத்துக்குப் பின்னரே காவல்துறையினர் வந்தனர்” என்று ஆதங்கத்தை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x