Published : 01 Apr 2018 10:27 AM
Last Updated : 01 Apr 2018 10:27 AM

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் சூறாவளி, மழை கோயில் பந்தல் சரிந்து 4 பக்தர்கள் பலி: 52 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம், ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது சூறாவளியுடன் மழை பெய்ததால் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பந்தல், மின் கம்பங்கள் சரிந்தன. இதில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவ விழா பத்ராத்ரி ராமர் கோயிலில் நடைபெற்றது. மாநில பிரிவினைக்குப் பிறகு தெலங்கானா அரசு பத்ராத்ரி ராமர் கோயிலில் ஸ்ரீராம நவமி விழாவை நடத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து ஆந்திராவின் கடப்பாவில் ஒண்டிமிட்டா பகுதியில் இருக்கும் பழமைவாய்ந்த கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா நடத்தப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்தது. இக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தத்தெடுத்து பராமரித்து வருகிறது.

இந்த கோயிலில் ஸ்ரீராமநவமி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மனைவியுடன் பங்கேற்று திருக்கல்யாணத்திற்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக அளித்தார்.

திருக்கல்யாணம் நடத்தப்படும் இடத்தில் தற்காலிக பந்தல் போடப்பட்டிருந்தது. மின் கம்பங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. நேற்றிரவு திடீரென பலத்த சூறாவளியுடன் மழை பெய்யத் தொடங்கியது. மழைக்கு ஒதுங்க பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக சூறாவளியால் பந்தல், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதில் ஒருவர் மாரடைப்பாலும் 2 பேர் மின்சாரம் பாய்ந்தும், ஒருவர் தள்ளுமுள்ளுவில் சிக்கியும் உயிரிழந்தனர். மேலும் 52 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கடப்பா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆறுதல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கடப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்பி, வருவாய் அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். “இந்த விபத்து அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுகிறது. தற்காலிக பந்தல் அமைத்ததால் விபத்து நேரிட்டுள்ளது. இதுபோல் நடக்காமல், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிரந்தரமாக இருக்கும்படி கட்டப்பட வேண்டும்” என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x