Published : 17 May 2024 11:39 PM
Last Updated : 17 May 2024 11:39 PM

டெல்லியில் கன்னையா குமார் மீது தாக்குதல்: பாஜக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் மீது பாஜக வேட்பாளர் அனுப்பிய ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார் கன்னையா குமார். டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளில் ஒன்றான இதில், பாஜக சார்பில் இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக பிரச்சாரத்தின் போது உடனிருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

— Press Trust of India (@PTI_News) May 17, 2024

சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பிறகு அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி இருப்பதாக கன்னையா குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தன்னுடைய புகழ் அதிகரித்து வருவதால், விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்ததாகவும் கன்னையா குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் மே 25ஆம் தேதி ஆறாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை மனோஜ் திவாரி 3,66,102 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x