Published : 17 May 2024 06:58 PM
Last Updated : 17 May 2024 06:58 PM

‘‘எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... அவர் ஏமாற்ற மாட்டார்’’ - சோனியா காந்தி @ ரேபரேலி

ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): "எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... அவர் ஏமாற்ற மாட்டார்" என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதியின் தற்போதைய எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என் இதயத்திலிருந்து சொல்கிறேன், நான் உங்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். உங்கள் முன் என் தலையை தாழ்த்தி மரியாதையுடன் எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

20 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். இதுவே என் வாழ்வின் மிகப் பெரிய சொத்து. ரேபரேலி எனது குடும்பம். அதேபோன்று அமேதியும் எனது வீடு. என் வாழ்வின் இனிய நினைவுகள் மட்டும் இங்கு இணைக்கப்படவில்லை, எங்கள் குடும்பத்தின் வேர்கள் கடந்த 100 ஆண்டுகளாக இந்த மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. அன்னை கங்கையைப் போன்ற புனிதமான இந்த உறவு, அவத் மற்றும் ரேபரேலி விவசாயிகள் இயக்கத்தில் தொடங்கி இன்று வரை தொடர்கிறது.

இந்திரா காந்தியின் இதயத்தில் ரேபரேலிக்கு தனி இடம் இருந்தது. உங்களுக்காக அவர் செய்த பணிகளை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். அவர் உங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். இந்திரா காந்தியும் ரேபரேலி மக்களும் எனக்குக் கொடுத்த அதே உயர் மதிப்பீடுகளை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கொடுத்துள்ளேன். அனைவரையும் மதிக்க வேண்டும், பலவீனமானவர்களை பாதுகாக்க வேண்டும், அநீதிக்கு எதிராக, மக்களின் உரிமைகளைக் காக்க போராட வேண்டும். பயப்பட வேண்டாம். ஏனென்றால், உங்கள் போராட்டத்தின் வேர்களும் மரபுகளும் மிகவும் வலிமையானவை.

உங்கள் ஆசிர்வாதத்தாலும் அன்பாலும் என் மனம் நிரம்பியது. உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணர விடவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது. என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார். இந்த கூட்டத்துக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று சோனியா காந்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x