Published : 17 May 2024 06:56 PM
Last Updated : 17 May 2024 06:56 PM

“யோகியின் ‘புல்டோசர்’ இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” - மோடிக்கு பதிலடி கொடுத்த ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், யோகியின் 'புல்டோசர்' தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது.

இடஒதுக்கீடு குறித்த யோகி ஆதித்யநாத்தின் பார்வை அல்லது நிலைப்பாட்டின் காரணமாக தான் மோடி அவரை ஆதரிக்கிறார். 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்ற அவரது முழக்கத்தின் ரகசியமும் இதுதான். மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன், பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை திருத்தவும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கவும் அவர் விரும்புகிறார்.

அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, 'மனுவாதி சிந்தனை' அடிப்படையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, ஆர்எஸ்எஸ்ஸின் பல ஆண்டு கால சதியை செயல்படுத்த பாஜக விரும்புகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'ராம் லல்லா'வை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்புவார்கள். ராமர் கோயில் மீது புல்டோசரை ஏற்றுவார்கள். எங்கே புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது குறித்து அவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பாடம் படிக்க வேண்டும்.

யோகி ஆதித்யாந்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் காரணமாக, இப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பரிசுப் பொருட்களை தேர்வு செய்வதற்கு எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதிருக்கவில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசுகளுக்காக 5-6 பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x