Published : 17 May 2024 03:06 PM
Last Updated : 17 May 2024 03:06 PM
அமேதி(உத்தரப்பிரதேசம்): பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது; அதனை நாங்கள் மீட்போம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசாதீர்கள்; அந்த நாட்டிடம் அணுகுண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவும் கூறுகிறார்கள். அவர்கள் பயப்பட விரும்பினால் பயப்படட்டும். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. அது எப்போதும் இந்தியாவுக்குச் சொந்தமானதாகவே இருக்கும். நாங்கள் அதனை மீட்போம்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைத்தார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் சரியாக நடக்கவில்லை என காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். என் வார்த்தைகளை நினைவில் வையுங்கள், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் ராமர் கோயிலுக்கு மீண்டும் பூட்டு போடுவார்கள்.
இண்டியா கூட்டணி என்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் குடும்ப கூட்டணி. அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். லாலு தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், மம்தா தனது மருமகனை முதல்வராக்க விரும்புகிறார், சோனியா தனது மகனை பிரதமராக்க விரும்புகிறார்.
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் தங்கள் குடும்பத்திற்கானவை என்று சோனியா காந்தி குடும்பத்தினர் கூறி வருகின்றனர். நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன், உங்கள் குடும்ப தொகுதி என்று கூறும் நீங்கள், அங்கு 70 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம்கூட இல்லையே, ஏன்? 2018-ல் யோகி ஆதித்யநாத்தின் அரசுதான் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் பணியை செய்துள்ளது.
யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசம் முழுவதும் குண்டர்களை 'சுத்தப்படுத்தும்' பணியை செய்துள்ளார். அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி, மும்பையில் இருந்து வந்திருப்பவர். கடந்த 2014ல் அவர் இந்த தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காக பிரச்சாரம் செய்ய நான் வந்தேன். அப்போது, ஸ்மிருதி இரானி இங்கு என்ன செய்வார் என்று நினைத்தேன்.
அப்போது அவர், நான் இங்கேயே வீடு கட்டி இங்கு வசிக்கப்போகிறேன் என்றார். அதுபோலவே, தற்போது அவர் அமேதி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கௌரிகஞ்சில் ஒரு வீட்டைக் கட்டி அங்கேயே வசித்து வருகிறார். தற்போதும் அவரே இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக, தினேஷ் பிரதாப் சிங்-கை மோடி நிறுத்தி இருக்கிறார். இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுங்கள். மோடியின் வளர்ச்சி எனும் கங்கையில் இணையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT