Published : 07 Apr 2018 07:56 PM
Last Updated : 07 Apr 2018 07:56 PM
தான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்பதை நிரூபிக்க தன்னுடைய 4 மாத கருவை பையில் சுமந்து காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பெண்ணைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்துக்கு ஒரு பையுடன் வந்தார்.
அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் சில தகவல்களைத் தெரிவித்தார். அதில், நீரஜ் பாண்டே, தீரஜ் பாண்டே, பிரேம் குமார், ராஜ்குமார் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் ஒரு மாதமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதன் காரணமாக தான் கர்ப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், அந்த கருவை கலைக்கக் கூறி, அந்த 4 பேரும் தன்னை மிரட்டினார்கள், கருவை கலைக்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்றும், இந்த விஷயத்தை வெளியே கூறினாலும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதன்பின், சப்னா என்ற செவிலியர் உதவியுடன் எனது வயிற்றில் வளர்ந்திருந்த 4 மாத கருவை கலைத்தனர்.
இந்த கருக்கலைப்பால் கடந்த சில நாட்களாக வலிதாங்க முடியாமல் வேதனையில் தவிக்கிறேன். என் வயிற்றில் வளர்ந்த 4 மாத கரு இந்த பையில் இருக்கிறது. இந்த கருவை உடற்கூறு பரிசோதனை செய்து கொள்ளலாம். அந்த 4 பேர் மீதும், நர்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும், அங்கிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் 4 மாத சிசு துணியில் சுற்றப்பட்டு ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் அந்த பெண்ணை போலீஸ் எஸ்பி. டி.வி.பாண்டேயிடம் அழைத்துச்சென்று நடந்த விவரங்களைத் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்த எஸ்பி பாண்டே, உடனடியாக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது, அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உறுதியளித்தார்.
மேலும், அந்த பெண்ணுக்கு மருத்துவசிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நர்ஸ் உள்ளிட்ட 5 பேர் மீது ஐபிசி பிரிவு 366, 367(2), 201, 506, 315, 316, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT