Last Updated : 16 May, 2024 04:03 PM

 

Published : 16 May 2024 04:03 PM
Last Updated : 16 May 2024 04:03 PM

கவனம் பெறும் 5-ம் கட்டத் தேர்தல்: உ.பி.யின் 14 தொகுதிகளில் களமிறங்கும் 5 விஐபி வேட்பாளர்கள்

புதுடெல்லி: மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னோவில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதுவரையும் 41 தொகுதிகளில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஐந்தாம் கட்டமாக மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 14-ல் கடந்த 2019 தேர்தலில் பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெற்றிபெற்ற ரேபரேலியையும் இந்தமுறை பாஜக கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

ரேபரேலியில் இந்தமுறை காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கேரளாவின் வயநாடு எம்.பி.,யான ராகுல், இங்கு இரண்டாவது தொகுதியாகப் போட்டியிடுகிறார்.

உ.பி.யின் ஐந்தாம்கட்ட 14 தொகுதிகளும் ராமர் கோயில் அமைந்த அயோத்தியை சுற்றி அமைந்துள்ளன. எனவே, இதுவரையும் பெறாத ராமர் கோயில் பலனை பாஜக இந்த தொகுதிகளில் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏனெனில், ஏழாம்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இடம்பெற்றுள்ள வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு வாக்குப்பதிவுக்கு முன்பாக அவர் அயோத்தி சென்று ராமர் கோயில் தரிசனம் மற்றும் பிரச்சாரம் செய்திருந்தார்.

உ.பி.,யின் 14 தொகுதிகளில் அயோத்தி இடம்பெற்ற பைஸாபாத், ரேபரேலி, அமேதி, லக்னோ மற்றும் கைஸர்கன்ச் ஆகிய ஐந்திலும் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவை அனைத்திலும் பாஜக பிரச்சாரம் செய்வதில் தீவிரம் காட்டுகிறது.

கடந்த 2004 முதல் அமேதியில் எம்பியாக இருந்த ராகுல் காந்தி, 2019ல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியுற்றார். இந்த முறையும் அவர் அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக பணியாற்றி வந்த கிஷோரி லால் சர்மா காங்கிரஸுக்காகப் போட்டியிடுகிறார். இவருக்காக காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா, பிரச்சாரத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் அமேதியில் பிரச்சாரம் செய்ததை அடுத்து, ராகுல் காந்தியும் வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், பிரதமர் மோடியும் பாஜக வெற்றிக்காக அமேதியில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான தொகுதியாக உள்ளது. எனினும், இங்கு 2004 முதல் போட்டியிட்ட சோனியாவுக்கு வாக்கு சதவீதம் குறைந்தபடி உள்ளது.

ரேபரேலியில் சோனியா, 2009 தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார். இது, 2014 இல் 64 சதவிகிதமாகக் குறைந்தது. பிறகு 2019-ல் மேலும் குறைந்து 56 சதவீதமானது. எனவே, சோனியாவுக்கு 2019-ல் கிடைத்ததை விட அதிகமான வாக்குகளுடன் வெல்ல ராகுல் தீவிரம் காட்டுகிறார். தம் மகனுக்காக சோனியாவும் ரேபரேலியின் பிரச்சாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உபியின் தலைநகரான லக்னோவில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் போட்டியிடுகிறார். இங்கு தொடர்ந்து இரண்டுமுறை எம்பியாக இருப்பவருக்காக பாஜகவின் பல முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

லக்னோவில் பாஜகவை எதிர்க்கும் சமாஜ்வாதி வேட்பாளரில் சிறு குழப்பம் நிலவுகிறது. இங்கு கடைசிநேரத்தில் மற்றொரு வேட்பாளர் சமாஜ்வாதியின் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் பிரச்சாரமும் செய்து வருகிறார். முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் போட்டியிட்டு வந்த தொகுதியாக லக்னோ உள்ளது. அவரது மறைவிற்கு பின் லால்ஜி டண் டண் போட்டியிட்டு வென்றும் வாக்கு சதவிகிதம் 35 எனக் குறைந்தது.

டண் டண் மறைவிற்கு பின் உபியின் முன்னாள் முதல்வருமான ராஜ்நாத்சிங் போட்டியிட்டு வருகிறார். 2014ல் ராஜ்நாத்துக்கு 54 சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன. 2019ல் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 57 சதவீதமானது. ராமர் கோயில் விவகாரம் எழுந்தது முதல் பைஸாபாத்தும் ஒரு முக்கியத் தொகுதியாகி விட்டது. இங்கு 5 முறை பாஜக எம்எல்ஏவாக இருந்த லல்லுசிங் போட்டியிடுகிறார். நீண்ட காலமாக பாஜக வசமுள்ள பைஸாபாத்தில் 2009ல் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது. பிறகு 2014 முதல் பாஜகவுக்காக வென்று வரும் லல்லுசிங் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

ஐந்தாவது முக்கிய தொகுதியாக கைஸர்கன்ச் அமைந்துள்ளது. இது முக்கிய தொகுதியாக அமைய காரணம் 2009 முதல் அதன் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீதான சமீபத்திய புகார்தான். தேசிய குத்துச்சண்டை விளையாட்டு சங்கத்தின் தலைவராக இருந்தவர் மீது சில வீராங்கனைகள் பாலியல் புகார் எழுப்பியிருந்தனர். இவர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதனால், அவரது மகனான கரண் பூஷண் சிங்கை இந்தமுறை பாஜக வேட்பாளராகி விட்டது.

இந்த ஐந்து முக்கிய தொகுதிகள் உள்ளிட்ட 14-லும் உ.பி.,யின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜும் போட்டியில் உள்ளது. இதன் வேட்பாளர்கள் பாஜகவுக்கு சாதகமாக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளை பிரிப்பர் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x