Published : 16 May 2024 03:04 PM
Last Updated : 16 May 2024 03:04 PM

“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” - மோடி

பிரதமர் மோடி

ஆசம்கர்(உத்தரப்பிரதேசம்): குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. தற்போது குடியுரிமை பெற்றிருப்பவர்கள், நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வந்தவர்கள். மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் சிஏஏ குறித்து பொய்களைப் பரப்பி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் கலவரத்தால் எரிக்க இவர்கள் முயன்றார்கள். இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தற்போதும்கூட, நரேந்திர மோடி வெளியேறியவுடன் சிஏஏ நீக்கப்பட்டுவிடும் எனக் கூறுகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இந்த நாட்டில் யாராவது பிறந்திருக்கிறார்களா? குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது. மதச்சார்பின்மை என்ற போர்வையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் எதிராக செயல்பட வைக்கும் அவர்களின் வாக்கு வங்கி அரசியலை மோடி அம்பலப்படுத்திவிட்டார். பிரிவினையால் பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு வந்த அகதிகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகியவை இரண்டு கட்சிகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் விற்கும் பொருட்கள் ஒன்றுதான். ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களை தாஜா செய்வது, பொய்களை பரப்புவது, குடும்ப அரசியல், ஊழல் ஆகியவற்றைத்தான் அவர்கள் விற்பனை செய்கிறார்கள். மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் 15% நிதியை ஒதுக்க காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் விரும்புகின்றன. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் மாஃபியாக்கள், கலவரக்காரர்கள் மற்றும் மிரட்டி பணம் பறிப்பவர்களுக்கு எதிராக செயல்பட்டு எனது தூய்மைப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஸ்ரீநகரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர முடியாது என்பதற்கு இதுவே நிரூபணம். ஜம்மு காஷ்மீரில் வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x