Published : 16 May 2024 09:24 AM
Last Updated : 16 May 2024 09:24 AM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை விமர்சித்து கேள்வி எழுப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி பேசும்போது, "இந்துக்கள் விரதம் இருக்கும் மாதத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இறைச்சி உணவைச் சாப்பிட்டு அதை காணொலியாக வெளியிட்டார்.
இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் நோக்கில் தேஜஸ்வி செயல் படுகிறார்" என்று குற்றம்சாட்டினார். இதனை சுட்டிக்காட்டி மம்தா பானர்ஜி கூறும்போது, "பிரதமர் மோடி விரும்பினால் நான் அவருக்கு சமைத்துக் கொடுக்க தயார். ஆனால், மோடிஜி எனது உணவை ஏற்பாரா? அவருக்கு பிடித்த எதுவானாலும் சமைத்துத் தருகிறேன். எனக்கு தோக்ளாவும் பிடிக்கும் மீன் குழம்பும் பிடிக்கும்.
இந்துக்களில் உள்ள பலதரப்பட்ட பிரிவினர் இடையே பலவிதமான சடங்குகளும் உணவுப் பழக்கவழக்கமும் உள்ளது. ஒருவரது உணவுப் பழக்கத்தில் ஒற்றை பார்வையை திணிக்க பாஜகவுக்கு அதிகாரம் அளித்தது யார்? இந்திய மக்களிடம் காணப்படும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பற்றி பாஜக தலைமைக்கு எத்தகைய புரிதலும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது"என்றார்.
மம்தாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்வினையாற்றி வருகின்றனர். மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் ததாகதா ராய் எக்ஸ் பக்கத்தில், "மோடிக்கு மீன் சோறு சமைத்துத் தர மம்தா பானர்ஜி ஆசைப்படுகிறார்.
அதற்கு முன்பாக அவர் ஏன் பன்றி இறைச்சி வறுவலை தங்களது கட்சியின் மூத்த தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீமுக்கு தரக்கூடாது? இதன் மூலம் சமயசார்பின்மையை உறுதிபடுத்திவிடலாம், தானம் வீட்டிலிருந்து தொடங்குகிறது என்றும் காட்டிவிடலாம், இறைச்சி உணவை கொண்டாடியதாகவும் இருக்குமே" என்றார்.
சிபிஎம் தலைவர் பிரகாஷ் பட்டாச்சாரியா கூறும்போது, "சகோதர-சகோதரி என்ற முறையில் மம்தா அக்கா நிச்சயமாக பிரதமருக்கு உணவு சமைக்க முன்வரலாம். பகை உணர்வை குறைக்க மம்தா இந்த வழியில் முயல்கிறாரா தெரியவில்லை.
ஆனால், இன்று நாடு எதிர் கொண்டு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மம்தா பானர்ஜியும் மோடியும் தான் பொறுப்பு" என்றார். திரிணமூல் காங்கிரஸ் எம்பி டோலா சென் கூறும்போது, "தான் விரும்புவதை உண்ணும் உரிமை மோடிக்கு எவ்வாறு உள்ளதோ அதேபோன்று ஒவ்வொரு இந்தியருக்கும் அதே உரிமை உள்ளது என்பதைத்தான் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டினார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT