Published : 16 May 2024 05:09 AM
Last Updated : 16 May 2024 05:09 AM
புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய, “ஏன் பாரதம் முக்கியம்?” புத்தகத்தின் வங்காள மொழி பதிப்பின் வெளியீடு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: நம் மீது மேற்கத்திய நாடுகள் தாக்கம் செலுத்த விரும்புகின்றன. ஏனெனில் கடந்த 70 முதல் 80 ஆண்டுகளாக இந்த உலகின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் விளங்கியதாக பல நாடுகள் நினைக்கின்றன. அதிலும் மேற்கத்திய நாடுகள்தான் கடந்த 200 ஆண்டுகளாக உலகின் மீது பெரும் தாக்கத்தை செலுத்தியதாக உணர்கின்றன.
இத்தகைய அதிகாரத்தை அனுபவித்துப் பழகியவர்கள் எப்படி அவ்வளவு எளிதில் அந்த பழைய பழக்கத்தை விட்டுக் கொடுப்பார்கள் சொல்லுங்கள்? மேற்கத்திய நாடுகள் வெளியிடும் நாளிதழ்கள் ஏன் இந்தியா குறித்து இவ்வளவு எதிர்மறை கோணத்தைக் கொண்டிருக்கின்றன? அவர் கள் எதிர்பார்த்த வகையில் தற்போதைய இந்தியா இல்லை என்பதே அதற்கான காரணம்.
தாங்கள் விரும்பக்கூடிய வர்க்கத்தினர், மக்கள், கோட்பாடு அல்லது வாழ்க்கை முறைப்படி இந்தியா ஆளப்பட வேண்டும் என்பதே அவர்களது நினைப்பு. ஆனால், இதற்கு நேர்மாறாக இந்திய மக்கள் சிந்திக்கும்போது அவர்கள் குழப்பமடைகிறார்கள். அதிலும் வெப்ப அலை வீசும் காலத்தில் இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதேன் என்றுகூட ஒரு மேற்கத்திய நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
இத்தகைய கொளுத்தும் வெயிலிலும் இந்திய மக்களில் பெரும் சதவீதத்தினர் வாக்களித்திருப்பது எவ்வளவு மகத்தான செயல்! இந்தியாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதி கூட மேற்கத்திய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதியைக் காட்டிலும் அதிக சதவீதத்தில் வாக்கு சேகரித் திருக்கும் என்பதுதான் உண்மை.
தங்களது நாட்டின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நாடுகளெல்லாம் இந்தியா எப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...