Published : 16 May 2024 04:24 AM
Last Updated : 16 May 2024 04:24 AM
புதுடெல்லி: நியூஸ் கிளிக் நிறுவனரை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறிய உச்ச நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவிக்க நேற்று உத்தரவிட்டது.
சீனாவிடமிருந்து நிதி உதவிபெற்று தேச விரோத கருத்துக்களை பரப்பும் விதமாக டிஜிட்டல் மீடியா நடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தா. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) ஆகியவற்றின் கீழ் கடந்தஅக்டோபர் 3-ம் தேதி அவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவரது கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
பிரபிர் புர்காயஸ்தாபிரபிர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது, ‘‘கைது செய்யப்பட்ட பிரபிர் புர்காயஸ்தா மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் செய்யப்பட்டபோது அவரது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும்போது, கைதுக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை’’ என்றார்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறியதாவது: பங்கஜ் பன்சால் வழக்கின் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யும்போது எழுத்துப்பூர்வமாக கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லி போலீஸ் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT