Published : 16 May 2024 04:14 AM
Last Updated : 16 May 2024 04:14 AM

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதல்முறையாக 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்

குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் நேற்று 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில் ஒரு பெண்ணுக்கு குடியுரிமை சான்றிதழை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா டெல்லியில் நேற்று வழங்கினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் (சிஏஏ) விண்ணப்பித்த 300 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை முதல்முறையாக மத்திய அரசு நேற்று வழங்கியது.

மதரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) வழிவகை செய்கிறது. இந்த சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது.

அதன்படி இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 2 நாட்களுக்குப் பின் இந்த சிஏஏ சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என்பதால், இந்த சட்டத்தின் கீழ்முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனாலும் டெல்லியில் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை நடந்த போராட்டத்தில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக இதற்கான விதிகளை அறிவிக்க மத்திய அரசு 9 முறை கால அவகாசம் பெற்றது. இதனால் சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது.

அரசிதழில் வெளியீடு: இந்நிலையில் சிஏஏ சட்டம் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலானது. சிஏஏ சட்டத்தின்படி யாருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு முடிவு செய்யும் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்திய குடியுரிமை கோருபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த சட்டத்தால் வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்களுக்கு எளிதாக குடியுரிமை கிடைத்துவிடும், இதனால் அசாம் மக்களின் வாழ்வுரிமை பாதிக்கும் என இந்திய அசாம் மாணவர்கள் கூட்டமைப்பினர் கடந்த மார்ச் மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சிகள் புகார்: இது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சி எனவும், தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ‘‘இது தேர்தல் நாடகம். சாதி, மதம், மொழியின் பெயரில் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதை திரிணாமூல் காங்கிரஸ் அனுமதிக்காது’’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என பல மாநில முதல்வர்கள் அறிவித்தனர். இதற்கு பதில் அளித்த பாஜக, ‘‘பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றது.

இந்நிலையில் சிஏஏ சட்ட விதிமுறைகளின் படி இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை, டெல்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு இயக்குநர் தலைமையிலான குழு கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்தது.

பெரும்பாலானோர் பாக். இந்துக்கள்: இதை தொடர்ந்து 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்க அந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள் ஆவர். இதையடுத்து அவர்களில் 14 விண்ணப்ப
தார்களுக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேற்று முதல்முறையாக வழங்கினார். குடியுரிமை பெற்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் குமார் பல்லா, சிஏஏ சட்ட விதிகளின் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், ‘‘சிஏஏ நாட்டின் சட்டம். டெல்லியில் இன்றே (நேற்று) 300 பேருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்றார்.

இந்திய குடியுரிமை சான்றிதழ் பெற்ற பாவனா என்பவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானில் இருந்து நான் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா வந்தேன். அங்கு பெண்கள் வெளியே சென்று படிப்பது சிரமம். இந்திய குடியுரிமை சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் தற்போது 11-ம் வகுப்பு படிக்கிறேன். நான் மேல் படிப்பு படிப்பேன்’’ என்றார்.

சான்றிதழ் பெற்ற ஹரிஸ் குமார் என்பவர் கூறும்போது, ‘‘டெல்லியில் நான் 14 ஆண்டுகளாக வசிக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது. எனக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு நன்றி’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x