Published : 15 May 2024 08:46 PM
Last Updated : 15 May 2024 08:46 PM
புதுடெல்லி: "மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும்" என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், "மக்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன. இன்று சாந்தினி சவுக் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து மாடல் டவுனில் நடந்த ரோடு ஷா-வில் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘கேஜ்ரிவாலை நேசிப்பவர்கள் மோடியை நிராகரியுங்கள்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து கேஜ்ரிவால் பேசுகையில், "நான் நேரடியாக சிறையில் இருந்து உங்கள் மத்தியில் இருப்பதற்காக வந்திருக்கிறேன். அவர்கள் (பாஜக) என்னை சிறை கம்பிகளுக்குள் தள்ளினார்கள். நான் உங்களை மிகவும் மிஸ் செய்தேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்களும் என்னை அதே அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்று தெரியும். நான் மிகவும் சாதாரண மனிதன். நம்முடையது டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும் மிகவும் சிறிய கட்சி.
அவர்கள் என்னை ஏன் சிறையில் அடைத்தார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய தவறுதான் என்ன? அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கொடுத்தது, அவர்களுக்காக நல்ல பள்ளிக்கூடங்கள் கட்டியது, மொஹல்லா கிளினிக்குகளைத தொடங்கி மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்கச் செய்ததுதான் நான் செய்த தவறு.
நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்களின் கைகளில் உள்ளது. நீங்கள் தாமரையைத் தேர்ந்தெடுத்தால் நான் மீ்ண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியது இருக்கும். நீங்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால் நான் சிறை செல்ல வேண்டியதில்லை.
நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது கேஜ்ரிவால் சிறைக்கு செல்ல வேண்டுமா என்று சிந்தியுங்கள். கேஜ்ரிவாலை நேசிப்பவர்கள் மோடியை நிராகரியுங்கள். இந்த முறை காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் ஒரே கூட்டணியில் போட்டியிடுகிறது. நீங்கள் ஜே.பி.அகர்வாலுக்கு ஆதரவு தரவேண்டும்.
நான் சிறையில் இருக்கும்போது என்னை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடவுள் அனுமனின் ஆசிர்வாதத்தால் நான் பலமாக உள்ளேன்" என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பேசினார்.
முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த அவர், உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT