Published : 15 May 2024 01:33 PM
Last Updated : 15 May 2024 01:33 PM
லக்னோ(உத்தரப்பிரதேசம்): நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வலுவான நிலையில் உள்ள இண்டியா கூட்டணி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சியை அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி வலிமை பற்றி பேசுகிறார். ஆனால், அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசுபவர்கள் மீது அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இண்டியா கூட்டணி அரசு அமைந்தால், ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ இலவச ரேஷன் வழங்குவோம். உத்தரப்பிரதேசத்தில் இண்டியா கூட்டணி 79 இடங்களில் வெற்றி பெறும். ஒரு இடத்தில் வெற்றிபெறுவதற்காகவே பாஜக இங்கு(உத்தரப்பிரதேசம்) போட்டியிடுகிறது.
நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி பதவியில் இருந்து வெளியேறுவதை மக்கள் முடிவு செய்துள்ளனர். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற இது மிக முக்கியமான தேர்தல். இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலே இந்த தேர்தல். ஒரு பக்கம் ஏழைகளுக்கு ஆதரவான கட்சிகள் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், வசதிபடைத்தவர்களுக்கு ஆதரவான, மதத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சிகள் இருக்கின்றன. காலிப்பணியிடங்கள் ஏராளமாக உள்ள போதிலும், பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரானது எங்கள் போராட்டம்.
26 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதை முதல்முறையாக நான் பார்க்கிறேன். களம் எவ்வாறு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பட்டியல் சமூகத்தவர்கள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம்.
மக்களுக்கு அளித்த அனைத்து உத்தரவாதங்களையும் நாங்கள் நிறைவேற்றுவோம். உணவு பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் நாங்கள். இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ ரேஷன் தருவோம் என்று உறுதியளிக்கிறேன். கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் தேர்தலின்போது அளித்த உத்தரவாதங்களை, ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்” என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “பாஜக தனது சொந்த எதிர்மறை கண்ணோட்டத்தில் சிக்கியுள்ளது. அவர்களின் வாக்குறுதிகள் பொய்யாகிவிட்டன. இண்டியா கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவை அளித்து வரும் நாட்டின் 140 கோடி மக்கள், பாஜக-வை 140 இடங்களுக்காக ஏங்க வைப்பார்கள். அவர்களின் ரதம் சிக்கிக் கொண்டது. நாடு மாற்றத்தை விரும்புகிறது. இண்டியா கூட்டணி அரசு அமைக்கும். வளமான வாழ்க்கையை வாழ விவசாயிகள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் நடத்திய போராட்டம் எவ்வாறு முடக்கப்பட்டது என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். உத்தரப்பிரதேசத்தில் 79 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT