Published : 15 May 2024 09:56 AM
Last Updated : 15 May 2024 09:56 AM

இந்தியாவில் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 1,000 ஸ்கைப் ஐடி-க்கள் முடக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு சைபர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடி-களை முடக்கியுள்ளது அரசு. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்த நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C). இதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் டிஜிட்டல் கைது உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு இந்த ஸ்கைப் ஐடி-க்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை இந்தியாவுக்கு வெளியில் இருந்து சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் இயக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தேசிய சைபர் க்ரைம் ரிப்போர்டிங் போர்டலில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக ஐ4சி தெரிவித்துள்ளது. காவல் துறை அதிகாரி, அமலாக்கத் துறை அதிகாரி, சிபிஐ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ரிசர்வ் வங்கி அதிகாரி போல தங்களுக்கு மிரட்டல் வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்.

அண்மைய காலமாக இந்தியாவில் பார்சல் மோசடி மூலமாக பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவங்களும் இந்தியாவில் பதிவாகி உள்ளன. இதில் சிலர் பணத்தை இழந்தும் உள்ளனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர். இதை உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

அதாவது பார்சலில் சட்டத்துக்கு புறம்பாக போதைப் பொருட்கள், போலி பாஸ்போர்ட் போன்றவை பாதிக்கப்பட்டவரின் பெயருக்கு வந்துள்ளதாக அல்லது அவர்கள் அனுப்பி உள்ளதாக சொல்லி மிரட்டுவார்கள். இந்த வழக்கில் இருந்து தப்ப ஒரு பெரிய தொகையை கேட்பார்கள்.

சமயங்களில் யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம் என சொல்லி வீடியோ அழைப்பில் தொடர்ந்து இணைப்பில் இருக்க சொல்லி டிஜிட்டல் கைது நடவடிக்கையிலும் குற்றவாளிகள் ஈடுபடுவார்கள் என இந்த வீடியோ கால் வழியிலான சைபர் மோசடி குறித்து மத்திய அமைச்சகம் விவரித்துள்ளது.

இதற்கு அவர்கள் ஸ்கைப் அல்லது இன்னும் பிற வீடியோ பிளாட்பார்ம்களை பயன்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைக்க சீருடை அணிந்து அல்லது அதிகாரி போன்ற தோரணையை வெளிப்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் வீடியோவழி சைபர் குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 1,000 ஸ்கைப் ஐடி-க்களை அடையாளம் கண்டு முடக்கியுள்ளது ஐ4சி. இந்த அமைப்பு சைபர் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள், மொபைல் சாதனங்கள் மற்றும் Mule வங்கிக் கணக்குகளை (கமிஷன் அடிப்படையில் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு) அடையாளம் கண்டு ஐ4சி முடக்கி வருகிறது.

இந்தியாவில் தினந்தோறும் பல்வேறு வகையில் இணையவழி குற்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது. இணையதள பயனர்கள் அது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். மோசடி நோக்கிலான அழைப்புகள், மெசேஜ் போன்றவற்றை பயனர்கள் பெற்றால் சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in தளத்தை அணுகலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x