Last Updated : 29 Apr, 2018 12:18 PM

 

Published : 29 Apr 2018 12:18 PM
Last Updated : 29 Apr 2018 12:18 PM

விவசாயிகளுக்கு மட்டுமா பிரச்சினை இருக்கு; அவங்க மட்டுமா தற்கொலை செய்றாங்க?: ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

 விவசாயிகளுக்கு மட்டும்தான் பிரச்சினை இருக்கிறதா? அவர்கள் மட்டும்தான் தற்கொலை செய்கிறார்கள் என்பதுபோல் பேசுகிறீர்கள் என்று மத்தியப் பிரதேச வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ண பட்டிதார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் கூட்டத்தில் மத்திய வேளாண்துறை இணையமைச்சர் புருஷோத்தமன் ருப்லா வெளியிட்ட அறிவிப்பில், நாட்டிலேயே அதிகஅளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் 3-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து விவசாயிகள் தற்கொலையில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கவும், அடுத்துவரும் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளைக் கவரமும் முதல்வர் சிவராஜ் சவுகான் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார், வட்டியில்லா கடன், கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு கொள்முதல் விலை அதிகரிப்பு போன்றவற்றை அறிவித்து வருகிறார். இந்நிலையில், அவரின் அமைச்சர் ஒருவரே விவசாயிகளின் தற்கொலை குறித்து எந்தவிதமான அக்கறையின்றி பேசியுள்ளது அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தூரில் இன்று நிருபர்களிடம் மத்தியப் பிரதேச வேளாண் அமைச்சர் பாலகிருஷ்ணா பட்டிதார் பேட்டி அளித்தார். அப்போது, நிருபர்கள் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் சற்று கோபமாக, ‘விவசாயிகளுக்கு மட்டும்தான் பிரச்சினை இருக்கிறதா?, மற்றவர்களுக்கு பிரச்சினை இல்லையா?. விவசாயிகள் மட்டும்தான் தற்கொலை செய்கிறார்களா?. போலீஸார், வர்த்தகர், தொழில்செய்பவர்கள் என பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயிகள் மட்டும் தற்கொலை செய்துகொள்வதுபோல் பெரிதாகப் பேசுகிறார்கள். யார்தான் தற்கொலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அதற்குரிய காரணம் தெரியும், மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்’ என்று ஆவேசமாக பேசிவிட்டுச் சென்றார்.

மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்து வேளாண்துறை அமைச்சரே அக்கறையின்றி கருத்து தெரிவித்து இருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்தள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x