Published : 14 May 2024 03:12 PM
Last Updated : 14 May 2024 03:12 PM
அமேதி (உத்தரப் பிரதேசம்): தனது 70 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் உருவாக்கியவற்றை, தனது கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், "எனது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதும் அமேதி தொகுதியில் ஊர் ஊராக கால் நடையாக சுற்றி வந்தார். அவர் உங்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டார். அமேதி மக்கள் அரசியல் நாகரிக அரசியலை நிறுவியவர்கள். என் பெற்றோர்கள் பொதுமக்களுக்காக பக்தியுடன் உழைத்ததால் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். இது இந்த நாட்டின் பழைய பாரம்பரியம்.
அமேதியில் முன்பு விளைச்சல் இல்லாத நிலங்கள்தான் அதிகம் இருந்தது. ஆனால், இன்று அமேதியில் பசுமை உள்ளது. அமேதி தொகுதிக்கு ராஜீவ் காந்தி முதலில் கழிவுநீர் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தை கொண்டு வந்தார். பிறகு BHEL, HAL போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் அமேதிக்கு கொண்டு வரப்பட்டன. ஒருவர் கொள்கையுடனும், உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிந்தால் வளர்ச்சி நிச்சயம்.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ததை விட 10 ஆண்டுகளில் அதிக பணிகள் நடந்துள்ளதாக நரேந்திர மோடி கூறுகிறார். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எவற்றையெல்லாம் உருவாக்கியதோ அவற்றையெல்லாம் நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைத்தார் என்பதுதான் உண்மை.
காங்கிரஸ் பெரிய அளவில் தொடங்கிய பணிகள், இந்த அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இன்று நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி அலைகிறார்கள். பணவீக்கத்தால் பெண்கள் மற்றும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆனால், நரேந்திர மோடி தனது சொந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார். பொதுமக்களோடு அவர் தொடர்பில் இல்லை. அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் வாரணாசி எம்.பி., ஆனால் அந்த தொகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு அவர் சென்றதில்லை. அப்படியென்றால் பொதுமக்களின் துயரத்தைப் பற்றி அவருக்கு என்ன புரியும்?" என விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT