Published : 14 May 2024 01:25 PM
Last Updated : 14 May 2024 01:25 PM

டெல்லியில் 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தினுள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், “மே 12-ம் தேதி அடையாளம் தெரியாத மின்னஞ்சல் கணக்கில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுத்திருந்த நபர் விமான நிலைய வளாகத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதேபோல் புராரி அரசு மருத்துவமனை மற்றும் மங்கல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பத்து மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தன” என்றனர்.

முன்னதாக, மே 1-ம் தேதி டெல்லியில் உள்ள 150-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தன. நீண்ட தேடுதல், விசாரணைக்கு பின்னர், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x