Published : 14 May 2024 08:25 AM
Last Updated : 14 May 2024 08:25 AM

மைசூர் மகாராஜா தொடங்கிய ‘அழியாத மை’ நிறுவனம்

தேர்தலின் போது வாக்களர்களின் கை விரலில் வைக்கப்படும் அழியாத ‘மை’ கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (எம்பிவிஎல்) என்ற நிறுவனம் தயார் செய்கிறது. மத்திய அரசு கடந்த 1962-ல் இந்த நிறுவனத்துக்கு ‘மை’ தயாரிக்கும் பொறுப்பை வழங்கியது.

நேஷனல் பிஸிக்கல் லேபரேட்டரி முறைப்படி இந்த மை தயாரிக்க வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டது. அப்போது முதல் இன்று வரை நம் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது நாடு முழுவதிலுமோ தேர்தல் நடந்தாலும் இந்த நிறுவனத்தின் ‘மை’ தான் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மையில் 7.25 சதவீதம் சில்வர் நைட்ரேட் உள்ளதால் இது விரலில் வைத்த உடனேயே காய்ந்து விடும் தன்மை கொண்டது. ஆதலால், இதனை உடனடியாக அழித்தாலும் அழியாது. 1.2.2006 முதல், வாக்காளர்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் நகம் முழுவதும் இந்த மை வைக்கப்படுகிறது. அதற்கு முன்பு வரை அதே விரலில் நகத்தின் அடி பாகத்தில் மட்டுமே மை வைக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு மை வைக்கும் பழக்கம் ஆரம்பத்தில் இல்லாமல் இருந்தது. 1950-ல் இந்த மை-க்கான காப்புரிமையை நேஷனல் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (என்ஆர்டிசி) பெற்றது. அதன் பின்னர், கவுன்சில் ஆஃப் சைன்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனத்தார் (என்பிஎல்) இந்த மையின் தன்மையை அதிகரித்தனர்.

இதனை தொடர்ந்து, மைசூரில் உள்ள மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் எனும் சிறிய நிறுவனம் அந்த மை-யை உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிறுவனத்தை கடந்த 1937-ல் அப்போதைய மைசூர் மகாராஜாவான நான்காவது கிருஷ்ணராஜ உடையார் தொடங்கினார். இந்த நிறுவனம் தயாரித்த மை-யானது நமது நாட்டில் 1962-ல் நடந்த 3-வது மக்களவைத் தேர்தலின் போது, மைசூரில் மட்டுமே முதன்முதலில் உபயோகப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் நாடு முழுவதும் இந்த மை அனைத்து தேர்தல்களிலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக மக்கள் தொகை உள்ள நமது நாட்டில், இந்த மக்களவை தேர்தலில் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலுக்காக 30 லட்சம் லிட்டர் அழியாத மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 55 கோடி செலவிடப்பட்டுள்ளது. 29 நாடுகளுக்கு ஏற்றுமதி மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த மை சர்வதேச அளவிலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. 1976 முதல் சர்வதேச அளவில் 29 நாடுகளுக்கு இந்த மை ஏற்றுமதி ஆகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x