Published : 14 May 2024 04:54 AM
Last Updated : 14 May 2024 04:54 AM
புதுடெல்லி: ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள் ளது.
சீனாவின் 'ஒரே பாதை, ஒரேமண்டலம்' திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருகிறது. இதன்மூலம் வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடனான கடல் வழி சரக்கு போக்குவரத்தை சீனா அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு போட்டியாக குவாதர் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ஈரானின் சபாகர் துறைமுகத்தை இந்தியா குத்தகைக்கு பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், அன்றைய ஈரான் அதிபர் கடாமியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளிடையே கடந்த 2016-ம் ஆண்டில் சபாகர் துறைமுக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் சபாகரின் சாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் இந்தியா நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.
தற்போது நீண்ட கால அடிப்படையில் ஈரானின் சபாகரில் உள்ளசாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக தலைநகர் தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் முன்னிலையில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
30% செலவு குறையும்: இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சரக்குகளை அனுப்ப முடியும். ஆனால் பாகிஸ்தான் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் ஈரானின் சபாகர் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் இருந்துஇயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சபாகர் துறைமுகத்தால் 30 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT