Published : 14 May 2024 04:32 AM
Last Updated : 14 May 2024 04:32 AM
அமராவதி/புதுடெல்லி: நான்காம் கட்டமாக 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 2 இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேற்குவங்கத்தின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸார், பாஜகவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. 4-ம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதன்படி ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதோடு அந்த மாநிலத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தெலங்கானாவில் 17, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.
ஆந்திராவில் வன்முறை: ஆந்திராவில் நேற்று காலையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் பிற்பகலில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் அரங்கேறின.
பல்நாடு மாவட்டம், கம்பம்பாடு கிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் தெலுங்கு தேசம் - ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கோடாரி, கத்தி, கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பீலேரில் தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் 3 பேரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடத்தியதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அன்னமைய்யா மாவட்டம், பாபக்ககாரி பல்லியில் தெலுங்கு தேசம் முகவரான சுபாஷ் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடப்பா மாவட்டத்தில் சின்ன குலபாலேரு வாக்குச் சாவடியில் தெலுங்கு தேசம் முகவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோகர்லபல்லியில் ஏற்பட்ட மோதலில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். இதேபோன்று திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி தொகுதியில் தெலுங்குதேசம், ஜெகன் கட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்ததோடு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பல்நாடு மாவட்டம் நரசராவ் பேட்டை நகராட்சி பள்ளி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா அர்விந்த்தின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய ரிசர்வ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கலவரக்காரர்களை கலைத்தனர்.
மேற்குவங்கத்தின் பர்தமான்-துர்காபூர் மக்களவைத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள், திரிணமூல் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாதுகாவலர்கள் காயமடைந்தனர். வாகனமும் கடுமையாக சேதமடைந்தது.
பிஹாரில் முங்கர் பகுதி வாக்குச் சாவடியில் தேர்தல் அலுவலர் ஓம்கார் குமார் சவுத்ரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
பிஹாரில் வன்முறை: பிஹாரின் முங்கர் பகுதிக்கு உட்பட்ட 145, 146 வாக்குச்சாவடிகளை குறிவைத்து சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படை வீரர்கள் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதில் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய பிரதேசத்தின் 8 மக்களவைத் தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ், உஜ்ஜைனியில் வாக்களித்தார். தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஓமர் அப்துல்லா ஆகியோர் ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
ஒட்டுமொத்தமாக 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.01 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாக 76.02 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 36.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தின் மக்களவை தேர்தலில் 71 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.
வேட்பாளரின் கன்னத்தில் அறைந்த வாக்காளர்: ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலியில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சிவக்குமாரும் அவரது ஆதரவாளர்களும் வந்தனர். அப்போது சிவக்குமார் வரிசையில் காத்திருக்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் சென்றார். இதற்கு ஒரு வாக்காளர் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், வாக்காளரின் கன்னத்தில் அறைந்தார். இதற்கு பதிலடியாக வேட்பாளர் சிவக்குமாரின் கன்னத்தில் வாக்காளர் அறைந்தார். வேட்பாளரின் ஆதரவாளர்கள், அந்த வாக்காளரை அடித்து உதைத்தனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு போலீஸார் வந்து அந்த வாக்காளரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையம், வேட்பாளர் சிவக்குமாரை வாக்குப் பதிவு முடியும் வரை வெளியில் எங்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது. இதன்படி சிவக்குமார் கைது செய்யபட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT