Published : 01 Apr 2018 10:18 AM
Last Updated : 01 Apr 2018 10:18 AM
திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக வைகுண்டம் க்யூ வரிசை உட்பட, தங்க வாசலில் இருந்து சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் கூடுதலாக ஏர் கன்டிஷன் (ஏசி) வசதி செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயில் திருப்பதியிலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இதனால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பக்தர்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில், குறிப்பாக மாட வீதிகள், அன்னதான சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தை தடுக்கும் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயிலுக்குள்ளும் தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமலையில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் மட்டுமின்றி, கல்யாண மண்டபம், தங்க வாசல், ஆனந்த நிலையம் ஆகிய இடங்களிலும் 24 மணி நேரமும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சுவாமி குடிகொண்டுள்ள ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் கற்ப கோயிலில் வெளியில் இருந்து காற்று வராது என்பதால், பக்தர்களுக்கு ஏற்படும் புழுக்கத்தை தவிர்க்க கூடுதல் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சன்னதியில் காற்றில் இருந்து வரும் மாசு வெளியேற 2 எக்ஸாஸ்ட் ஃபேன்கள் பொருத்தப்பட்டுள்ளது. ராயலவாரி மெட்டு பகுதியில் 2, கோயில் மணி அருகே 2, உண்டியல் அருகே 3 ஏசிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, தினமும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கல்யாண உற்சவம் நடைபெறுவதால், இந்த மண்டபத்திலும் 2 ஏசி இயந்திரங்கள், உண்டியல் பணம் எண்ணப்படும் ‘பரகாமணி’ இடத்தில் 6 ஏசிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், திருமலையில் பஸ் நிலையம், முக்கிய சத்திரங்கள், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம், மாட வீதிகள், லட்டு விற்பனை மையம், பேடி ஆஞ்சநேய சுவாமி சன்னதி உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி சேவா மூலம் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை இலவச மோர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT