Published : 13 May 2024 03:37 PM
Last Updated : 13 May 2024 03:37 PM

“பிரதமர் மோடி எப்படி தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிகிறார்?” - ராகுல் காந்தி

ரேபரேலி: ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கும் பிரதமர் மோடி, எப்படி தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று (மே.13) அத்தொகுதியில் தனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “ரேபரேலி உடனான எங்கள் குடும்ப உறவு பல ஆண்டுகளுக்கு முந்தையது. எங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு இங்கிருந்துதான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ரேபரேலி மக்கள் ஜவஹர்லால் நேருவுக்கு அரசியல் கற்றுத் தந்தார்கள். அவர் பிரதமராகி நாட்டுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

பிறகு, எனது பாட்டி இந்திரா காந்தியும் ரேபரேலியில் இருந்துதான் வந்தார். அவர் பசுமைப் புரட்சி ஏற்படவும், வங்கிகள் தேசியமயமாக்கப்படவும் நடவடிக்கை எடுத்தார். அவரை அடுத்து எனது தாயார் சோனியா காந்தியும் ரேபரேலியில் இருந்துதான் மக்களவை சென்றார். இப்போது நான் இங்கு வந்திருக்கிறேன். நான் அன்பின் கடையை விரித்தேன். நீங்களும் பதிலுக்கு அன்பைக் காட்டினீர்கள். உங்களுக்காக நான் போராடுவேன். நீங்கள் என்னை வரவேற்றதற்காக நன்றி!

இந்த நாட்டில் உள்ள 22 பெரும் பணக்காரர்கள், 70 கோடி மக்களின் பணத்தை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்கிறார். பிரதமரின் சம்பளம் ரூ. 2.5 லட்சம். தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள சூட்களை அவர் எப்படி அணிகிறார்? அவருக்காக யார் சூட் வாங்குகிறார்கள்?

இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை சந்தித்து நாட்டின் பிரச்சினைகள் குறித்து கேட்டேன். வேலைவாய்ப்பின்மைதான் தாங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை என்று இளைஞர்கள் தெரிவித்தார்கள். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததுதான் தாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை என்று விவசாயிகள் கூறினார்கள். போதிய ஊதியம் கிடைக்காததுதான் தாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை என்று தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.

எனவே, கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்க நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். ஏழைக் குடும்பங்களின் பட்டியலை நாங்கள் தயாரிப்போம். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் வழங்குவோம். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த பணம் தொடர்ந்து வழங்கப்படும்.

பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அரசியல் சாசனத்தை ஒழிப்போம் என்று அவர்களின் தலைவர்கள் கூறுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் என்ன கிடைத்ததோ, அது அரசியல் சாசனத்தின் மூலம் கிடைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் நாட்டில் மக்கள் ஆட்சி இருக்காது, அதானி - அம்பானி ஆட்சிதான் இருக்கும். அரசியல் சாசனம் ஒழிக்கப்பட்டால் பொதுத் துறையில் வேலை கிடைக்காது, இடஒதுக்கீடு முடிவுக்கு வரும். நாட்டில் உள்ள ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் மூடப்படும்.

கரோனா காலகட்டத்தில் வென்டிலேட்டர்கள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை என்பதால், கங்கையில் இறந்த உடல்கள் குவியல்களாக இருந்தன. அப்போது நரேந்திர மோடி, மொபைல் லைட்டை ஆன் செய்யுங்கள் என்றும், தட்டைக் கொண்டு ஒளி எழுப்புங்கள் என்றும் பேசினார். நரேந்திர மோடி இதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது, ​​மக்கள் கொரோனாவால் இறந்து கொண்டிருந்தனர். ஆனால் ஊடகங்கள், ஆஹா பாருங்கள், என்ன ஒரு பிரதமர் என்று புகழ்ந்து தள்ளின.

உத்தரப் பிரதேசத்தின் அமேதிக்கு நான் துப்பாக்கிச் தொழிற்சாலையைக் கொண்டு வந்தேன். ஆனால், இதுவரை தொடங்கப்படவில்லை. ஏனென்றால் நரேந்திர மோடி இந்தத் தொழிற்சாலையை அதானிக்குக் கொடுக்க விரும்புகிறார். நரேந்திர மோடி அதானி - அம்பானிக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கொடுக்கிறார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் வெளிநாட்டில் சொத்து வாங்குகிறார்கள். நாங்கள் உங்களுக்கு பணம் கொடுத்தால் நீங்கள் ரேபரேலியில் இருந்து பொருட்களை வாங்குவீர்கள். இங்கு சந்தையில் பணம் கிடைக்கும். அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வேலை கிடைக்கும், மக்களுக்கும் வேலை கிடைக்கும்” என்று ராகுல் காந்தி உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x