Published : 13 May 2024 03:02 PM
Last Updated : 13 May 2024 03:02 PM
காங்டாக்: இந்தியா மற்றும் சீன தேச எல்லையை ஒட்டியுள்ள இந்திய எல்லையோர கிராமப் பகுதிகளை சாலை மார்க்கமாக இணைக்கும் வகையில் துடிப்பான கிராமங்கள் திட்டம் (Vibrant Village Porgramme) மூலம் சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.2 கோடி வரை அரசு செலவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து மாத காலத்தில் சுமார் 113 சாலைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அருணாச்சல் பிரதேசத்தில் 105, உத்தராகண்டில் 5 மற்றும் சிக்கிமில் 3 சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் சீன எல்லையை ஒட்டியுள்ள இந்திய கிராம பகுதிகளுக்கான சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். சீனாவை ஒட்டி அமைந்துள்ள சுமார் 169 கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் ரூ.119 கோடி செலவில் சுமார் 43.96 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.2.7 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கு பிறகு அதனை மாநில அரசு பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல சிக்கிமில் 18.73 கிலோ மீட்டர் தூரம் சாலை மற்றும் 350 மீட்டர் இரும்புப் பாலம் என ரூ.96 கோடி செலவில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆகும் செலவு ரூ.2.4 கோடி. இது மத்திய அமைச்சகத்தின் அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ல் துடிப்பான கிராமங்கள் திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி இருந்தது. இதன் மூலம் அருணாச்சல், இமாச்சல், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகள் பலன் பெறும் என தெரிவிக்கப்பட்டது. எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்களின் இடப்பெயர்வை தடுக்கும் வகையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
முதல்கட்டமாக அருணாச்சலில் சுமார் 68 சதவீத கிராமங்களிலும், மற்ற பகுதிகளில் சுமார் 207 கிராமங்களிலும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கான பட்ஜெட் ரூ.4,800 கோடி. அதில் ரூ.2,500 கோடி சாலை பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தியா - சீனா முரண்: இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் இருதரபுக்கும் இடையில் பூசலுக்கும் மோதல்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன.
அருணாச்சலப் பிரதேசம் தங்களின் பகுதி என்ற சீனாவின் கூற்றினை தொடர்ந்து மறுத்து வரும் இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் அந்தப் பகுதிகளுக்கு பெயரிடுவது யதார்த்தத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT