Published : 13 May 2024 10:45 AM
Last Updated : 13 May 2024 10:45 AM
பாஜகவால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஓடிசாவில் வெல்ல முடியாது என்று ஓடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று தெரிவித்தார். முன்னதாக, ஒடிசா மாநிலம் புல்பானி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “ஓடிசா மாநிலம் எல்லா வளமும் மிகுந்த மாநிலம்.
குஜராத்தைவிட 100 மடங்கு வலிமைமிக்கது. ஆனால், வளர்ச்சியில் அது மிகவும் பின்தங்கி இருக்கிறது. காங்கிரஸும் பிஜேடியும்தான் காரணம். என்னால் ஐந்தே ஆண்டுகளில் ஒடிசாவை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்ட முடியும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கால் கையில் காகிதம் இல்லாமல் ஓடிசாவின் மாநிலங்களின் பெயரைக் கூட சொல்ல முடியாது. ஒடிசாவின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் அறிந்த ஒருவரே அங்கு ஆட்சி செய்ய வேண்டும். ஜூன் 10-ம் தேதி பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒடிசாவில் பதவி ஏற்பார்” என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நவீன் பட்நாயக் வீடியோ பதிவொன்றை நேற்று வெளியிட்டார். அதில் அவர், “அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாஜகவால் ஒடிசாவில் வெல்ல முடியாது. மோடிக்கு தேர்தல் சமயத்தில் மட்டும்தான் ஒடிசா குறித்து நினைவு வரும்.
2014, 2019 தேர்தல்களில் தான் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் மோடி மறந்துவிட்டார். ஒடிசாவின் மொழி, பண்பாடு குறித்து அவருக்கு எந்த அக்கறையும் கிடையாது. சம்ஸ்கிருத மொழிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கிய அவர், ஒடியா மொழிக்கு எதுவும் ஒதுக்கவில்லை. ஓடிசா ஆளுமை யாருக்கும் பாரத ரத்னா வழங்கப்படவில்லை.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவேன், 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். எதையும் நிறைவேற்றவில்லை. ஒடிசா மக்களுக்கு பிஜேடியை பற்றி தெரியும். அவர்கள் 6-வது முறையாக பிஜேடியை ஆட்சியில் அமர்த்துவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT